புனே: வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து அச்சப்பட தேவையில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) கூடுதல் இயக்குநர் சமிரான் பாண்டே தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் ஐரோப்பா, ஆசிய நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூடுதல் இயக்குநர் சமிரான் பாண்டே கூறியதாவது: சீனா, ஹாங்காங், ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் வைரஸ் பரவுவது குறித்து அச்சப்பட தேவையில்லை. ஏதாவது ஒரு நாட்டில் கரோனா பரவல் அதிகரிக்கிறது என்றால் இந்தியாவிலும் அதிகரிக்கும் என்பது தவறான கண்ணோட்டம். அறிவியல்ரீதியாகவும் புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் இந்தியாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளை பார்த்து நாம் அஞ்ச தேவையில்லை. சர்வதேச, உள்நாட்டு நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.