மதிமுகவை திமுகவுடன் இணைக்க வலியுறுத்தி மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை நடத்தியது மதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, வைகோவுக்கு எதிராக மூத்த மாவட்டச் செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தி பரபரப்பு பேட்டி அளித்துள்ளனர்.
மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், மதிமுக விருதுநகர் மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், திருவாரூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் சிவகங்கையில் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மதிமுகவை தாய்க் கழகமான திமுவுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து அறிந்த மதிமுக சிவகங்கை மாவட்ட துணை செயலாளர் ஷாலுஸ் மற்றும் மதிமுக தொண்டர்கள் சிவகங்கை மாவட்ட மதிமுக அலுவலகம் முன்பு திரண்டு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனால், மதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் ஆதரவாளர்கள் மற்றும் ஷாலுஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கே வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், “மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரு தலைமுறையின் எதிர்காலத்தையே தொலைத்துவிட்டார்” என்று குற்றம்சாட்டி பரபரப்பு பேட்டி அளித்தார்.
மதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மதிமுக தொடங்குகிற போது இருந்த இளைய தலைமுறையினரை ஈழத்தையே பெற்றுத்தரப்போவதைப் போல பேசி, அந்த இயக்கத்திற்கு கொண்டு சென்றவர் எந்த அடிப்படையான வேலைகளையும் செய்யாமல் அந்த தலைமுறையின் எதிர்காலத்தையே தொலைத்திருக்கிறார். கட்சிக்காக எந்த உழைப்பையும் தராத தன்னுடைய மகனை கட்சியில் கொண்டுவந்து சேர்க்க வேண்டும் என்று வருகிறபோது இந்த கட்சியிலே இருக்கக்கூடிய மூத்த உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை. மதிமுகவை திராவிட இயக்கத்துக்காக பாடுபடுகிற திமுகவுடன் இணைதுவிட வேண்டும்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“