ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை தி.மு.க.விடம் கேட்டு பெறுங்கள்- தமிழக காங்கிரசுக்கு சோனியா அறிவுறுத்தல்

சென்னை:

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நகர்மன்ற தலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளை தி.மு.க. வினர் எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றார்கள்.

இது தி.மு.க. தலைமையை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களை கைப்பற்றிய தி.மு.க.வினர் உடனடியாக பதவிகளை ராஜினாமா செய்யும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.

அவரது உத்தரவுக்கு கட்டுப்பட்டு சிலர் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். மேலும் சிலர் இதுவரை ராஜினாமா செய்யவில்லை. அவ்வாறு ராஜினாமா செய்யாதவர்களில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவரும் ஒருவர். இந்த பிரச்சினை காங்கிரஸ் டெல்லி தலைமை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி நினைவிடம் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைமை மட்டுமல்லாது டெல்லி காங்கிரஸ் தலைமையும் தீவிரமாக உள்ளது.

 

இந்த பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 12 வார்டுகள் தி.மு.க.வுக்கும் 3 வார்டுகள் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டன. பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்படுவதாக உடன்பாடு செய்யப்பட்டது.

தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 2 வார்டுகளில் சுயேட்சைகள் களம் இறக்கப்பட்டு 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி அதில் ஒரு வார்டை அ.தி.மு.க. கைப்பற்றியது.

காங்கிரஸ் சார்பில் நகர காங்கிரஸ் தலைவர் மனைவி செல்வமேரி போட்டியிட்டு வெற்றிபெற்றார். காங்கிரஸ் ஒரு இடத்திலும் தி.மு.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

கூட்டணி ஒப்பந்தப்படி பேரூராட்சி தலைவர் பதவிக்கு காங்கிரசின் செல்வமேரி அதிகாரப்பூர்வமான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தி.மு.க. நகர செயலாளர் சதீஸ் குமாரின் மனைவி சாந்தி தி.மு.க. சார்பில் போட்டி வேட்பாளராக களம் இறங்கி வெற்றிபெற்றார்.

கட்சி தலைமை உத்தரவிட்டும் தி.மு.க. இன்னும் ராஜினாமா செய்யவில்லை. இந்த பேரூராட்சியை பெறுவதில் காங்கிரஸ் மிக தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தமிழக காங்கிரஸ் சார்பில் பேசப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த பிரச்சினை சோனியா மற்றும் ராகுலிடம் எடுத்து சொல்லப்பட்டது. ராஜீவ் நினைவிடம் இருக்கும் அந்த பேரூராட்சியை கூட்டணி ஒப்பந்தப்படி தி.மு.க. தலைமையிடம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமைக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே மீண்டும் தி.மு.க. தலைமையிடம் பேச காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.

இதையும் படியுங்கள்… உக்ரைன்- ரஷியா போருக்கிடையே போலந்து செல்கிறார் ஜோ பைடன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.