சீனாவில் 132 பேருடன் சென்றுக் கொண்டிருந்த விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்தவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சோ நகருக்கு பயணமானது. 123 பயணிகள், இரு விமானிகள், ஏழு பணியாளர்கள் என மொத்த 132 பேருடன் இந்திய நேரப்படி காலை 10.40 மணிக்கு குன்மிங்கில் இருந்து அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது.
அப்போது எதிர்பாராவிதமாக குவாங்சி பகுதியில் உள்ள வூஷூ என்ற நகருக்கு அருகே மலைகள் சூழ்ந்த இடத்தில் விமானம் திடீரென விழுந்து விபத்துக்குள்ளானது. பிற்பகல் 12.35 மணிக்கு அந்த விமானம் தரையிறங்கவிருந்த நிலையில், காலை 11.52 மணியளவிலேயே, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதையடுத்து, விமானத்துடனான தொடர்பை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அது கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது தெரியவந்தது.
அடர்ந்த மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் விமானம் கீழே விழுந்து நொறுங்கிய நிலையில், காட்டுத்தீ ஏற்பட்டதை அடுத்து, விபத்து நிகழ்ந்த பகுதிக்கு மீட்புக் குழுக்களும், தீயணைப்புத்துறையினரும் விரைந்தனர்.
சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்த விமானம் சில நொடிகளில் 3,225 அடிகளுக்கு இறங்கிய நிலையில் கீழே விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அந்த விமானம் ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எந்திரக் கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாக சீன அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், விமானத்தின் கறுப்பு பெட்டியை கைப்பற்றி, விபத்துக்கான காரணம் குறித்து கண்டறிய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், விபத்தில் பயணிகள் உயிரிழந்ததை உறுதிப்படுத்திய ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், பலியானோர் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை.
அந்நாட்டில் கடைசியாக 2010ஆம் ஆண்டில் தான் விபத்து நிகழ்ந்ததாகவும், அதில் பயனித்த 44 பேர் உயிரிழந்ததாகவும் ஏவியேஷன் சேப்டி நெட்வொர்க் என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.