TNPSC Exam: உங்க வீட்டில் இருந்தபடி டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு பயிற்சி; தொடங்கி வைத்த ஸ்டாலின்!

Tamilnadu CM Stalin initiates TNPSC coaching classes in Kalvi TV: தமிழக இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு தயாராக பயிற்சி அளிக்கும் வகையில், கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக இளைஞர்கள் பெரும்பாலானோரின் கனவு அரசு வேலை. இதற்காக தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். தமிழக அரசு பணிகள் மட்டுமல்லாமல், மத்திய அரசு, ரயில்வே, வங்கிகள் போன்ற அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனப் பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்காக இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்.

இதனிடையே தமிழக இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்தநிலையில், கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி மூலம் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வழங்குவது குறித்து அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இதற்கான அரசாணைகள் 07.01.2022 அன்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் துவக்கி வைத்தார்.

இதையும் படியுங்கள்: ஸ்மார்ட் போன்களிலே 3D வீடியோக்களை எடுக்கலாம்; சென்னை ஐஐடி-ன் புதிய ஐடியா

தமிழ்நாட்டின் இளைஞர்கள், அரசுத்துறை பணியினைப் பெற மேலும் சிறப்பாகவும் எளிய வழிமுறையிலும் அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கையாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறையுடன் இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியின் மூலம் 20.03.2022 இன்று முதல் தொடர்ந்து ஒளிப்பரப்பப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கி தேர்வாணையம், ஒன்றியத்தின் பணியாளர் தேர்வாணையம் போன்ற பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் இருக்கும்.

இளைஞர்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சியுடன் ஊக்கப்படுத்தும் உரைகள், ஆளுமை வளர்ச்சி, நேர்முக தேர்வுக்காக தயார் செய்தல், கலந்துரையாடல்கள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாளினை கூர்ந்து ஆய்வு செய்தல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் இந்நிகழ்ச்சி மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படும்.

பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகமாக வெற்றி பெற இம்முயற்சி வழிவகுக்கும். தமிழ்நாட்டின் தொலைதூரத்தில் வசிக்கும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் பயன் அளிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.