புதுடெல்லி:
வங்க கடலில் அந்தமான் தீவுகள் அருகே நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாறியது.
இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. அந்தமான் தீவுகளுக்கு 100 கி,மீ. தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதியிலும், நிக்கோபார் தீவுகளுக்கு 200 கி.மீ. தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதியிலும் அசானி புயல்மையம் கொண்டிருந்தது.
பின்னர் அங்கிருந்து மியான்மர் மற்றும் வங்க தேச கடற்கரை நோக்கி நகரத்தொடங்கியது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்தமான் தீவுகளில் இருந்து அசானி புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
18 டிகிரி அட்சரேகையில் நகர்ந்து வரும் அசானி புயல் நாளை அதிகாலை மியான்மர் பகுதியில் தாண்ட்வே கடற்பகுதியில் கரையை கடக்கிறது.
அசானி புயல் கரையை கடக்கும் போது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுபகுதிகளில் பலத்த மழை பெய்யும். அதோடு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்.
மேலும் அந்தமான் கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்படும். கிழக்கு மத்திய வங்க கடல் மற்றும் தென் கிழக்கு வங்க தேச கடற்கரை பகுதியிலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்.
அசானி புயல் கரையை கடக்கும் போது அந்த பகுதியில் பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவானதுமே அந்த பகுதியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அனைவரும் கரை திரும்புமாறு கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
அதன்படி அந்தமான், நிகோபார் பகுதிகளுக்கு சென்ற படகுகள் அனைத்தும் அருகில் உள்ள துறைமுகங்களில் கரை ஒதுங்கி வருகின்றன. புயல் கரையை கடந்து கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னரே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்…மைக்ரோ ஓவனுக்குள் 2 மாத பெண் குழந்தை பிணம்