சீயோல்: தென்கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா மரணங்களால், அங்குள்ள தகன நிலையங்களில் கூடுதல் உடல்களை தகனம் செய்யவும், உடல்களைப் பாதுகாத்து வைக்க அதிகமான குளிரூட்டிகளை ஏற்பாடு செய்யவும் அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தென்கொரியாவில் உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. தென்கொரியாவில் நாளொன்றுக்கு 1000 முதல் 1400 உடல்கள் வரையில் தகனம் செய்யும் அளவிற்கு நீண்ட நேரம் வேலைசெய்யும் வகையில் 60 நிலையங்களுக்கு சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தென்கொரியாவில் அதிகரித்து வரும் கரோனா மரணங்களால், தகன நிலையங்களில் இறந்தவர்களின் உடல்களுடன் உறவினர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.
இதுகுறித்து தென்கொரிய சுகாதாரத் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரியான சன் யோங்ரே கூறுகையில், “அதிகரித்து வரும் கரோனா மரணங்களினால், இறந்தவர்களின் உடல்கள் தாமதம் இல்லாமல் தகனம் செய்ய வேண்டும் என்பதற்காக, நாட்டின் பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் தகன நிலையங்கள் தற்போது செயல்படுவதை விட 5 முதல் 7 மடங்கு கூடுதலாக பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல தகன நிலையங்களில் உடல்கள் தேங்குவதைத் தடுக்கும் வகையில், தங்களின் பிராந்தியங்களுக்கு வெளியில் இருந்து வரும் உடல்களையும் தகனத்திற்கு எடுத்துக் கொள்ள ஊழியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். அத்துடன் தகன நிலையத்தில் உடல்களை பாதுகாத்து வைக்க கூடுதலாக குளிரூட்டிகள் அல்லது குளிரூட்டப்பட்ட அறைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். நாட்டின் பல்வேறு பிரந்தியங்கள் அங்குள்ள முதியவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இறப்பு விகிதம் மாறுபடுகிறது. அதேபோல தகன நிலையங்களிலும் தகனம் செய்யும் எண்ணிக்கையில் மாறுபடு இருக்கின்றன” என்றார்.
தென்கொரியாவில் செவ்வாய்க்கிழமை மட்டும் 384 பேர் கரோனாவால் மரணமடைந்துள்ளனர். இவர்களில் 300 பேர் கடந்த வியாழக்கிழமையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். தற்சமயம் தீவிர மற்றும் அபாயக்கட்டத்தில் மட்டும் 1104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 70 சதவீதம் தீவிர சிகிச்சை பிரிவுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 நான்கு மணிநேரத்தில் 3,53,980 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியிருந்ததை விட வேகமாக ஒமைக்ரைான் வைரஸ் பரவி வருகிறது. இதனால் பாதிப்பு அதன் உச்சத்தை தொடலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்கொரியாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு நிறுவனத்தின் ஆணையர் ஜியோங் யேங்கியாங் கூறுகையில், “ஒமைக்காரனின் புதிய வகையான பிஏ.2 வைரஸின் தீவிரம் காரணமாக இந்தத் தொற்று பாதிப்புகள் நீண்ட நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பிருக்கிறது. மற்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் தென்கொரியாவின் கரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. ஆனாலும், தொற்று பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் காலம் மற்றும் மரணமடையும் காலம் ஆகியவற்றுக்கான இடைவெளி ஒரு வார காலம் மட்டுமே இருப்பதால், நாடு பெரும் அச்சுறுத்தலின் விளிம்பில் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்” என்றார்.
சீயோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை அதிகாரியான ஓ சேயோங் ஹெயான் கூறுகையில், “நாட்டிலுள்ள தகன நிலையங்கள் ஏற்கெனவே நெருக்கடியை சந்திக்கத் தொடங்கிவிட்டன. பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள 13 பிணவறைகள் நிரம்பிவிட்டன. இறந்தவர்களின் குடும்பங்கள் இரண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக இறந்தவருக்கான இறுதிச் சடங்கிற்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏதாவது அறை காலியாக இருந்தாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த அறை பிணங்களால் நிரம்பி விடுகின்றன” என்கிறார்.
சமீபத்தில் தென்கொரிய அதிகாரிகள், எல்லைக் கட்டுப்பாடு, இளம் வயதினர் கூட்டமான பொது வெளிகளில் நுழைவதற்கு முன்பு ‘கரோனா இல்லை’ என்ற சான்றிதழைத் தர வேண்டும் போன்ற தனது கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.