புதுச்சேரி-அரசு வாகனங்கள் எரிபொருள் நிரப்ப ஒரே நேரத்தில் சாரம் கூட்டுறவு கட்டட மைய பெட்ரோல் பங்க்கில் குவிந்து விடுவதால் காமராஜர் சாலையில் இரவில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.புதுச்சேரி கூட்டுறவு நுகர்வோர் இணையமான ‘கான்பெட்’ நிறுவனம் சார்பில், புதுச்சேரியில் ஐந்து இடங்களில் பெட்ரோல், டீசல் பங்க் செயல்பட்டு வருகின்றன.சாரம் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள பெட்ரோல் பங்க் நஷ்டத்தில் தள்ளாட்டம் கண்டது.அதையடுத்து இந்த பெட்ரோல் பங்கினை புதுச்சேரி கூட்டுறவு கட்டட மையம் தற்போது எடுத்து நடத்தி வருகிறது.இந்த பெட்ரோல் பங்க் தற்போது லாப சூழ்நிலைக்கு திரும்ப துவங்கியுள்ளதால் இங்கு அரசு வாகனங்கள் பெட்ரோல், டீசல் போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இரவு 8.30 மணியில் இருந்து அரசு வாகனங்கள் இந்த பங்கில் குவியத் துவங்குவதால், காமராஜர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.சில நேரங்களில் இரவு 10.௦௦ மணியை கடந்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்வோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.அரசு வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்து பெட்ரோல்,டீசல் போடுவதை முறைப்படுத்தினால் தான் காமராஜர் சாலையில் போக்குவரத்து நெரிசலை தடுக்க முடியும். இதற்கான நடவடிக்கையை போக்குவரத்து துறை, கூட்டுறவு கட்டட மைய நிறுவனத்துடன் இணைந்து எடுக்க வேண்டும்.
Advertisement