கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற எந்தவொரு ஆர்ப்பாட்டங்களின்போதும், ஆர்ப்பட்டக்காரர்களை தடுக்கும் வகையில் எந்தவித தடைகளையும், தாக்குதல்களையும் சமகால அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்..
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கான முழுமையான சுதந்திரத்தை ஜனாதிபதி மக்களுக்கு வழங்கியுள்ளார். அவற்றிற்கு நாம் ஒருபோதும் இடையூறுகளை ஏற்படுத்தவில்லை. ஜனநாயக நாடு என்ற ரீதியில் நாம் மக்களுக்கு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அதேநேரம், சில அரச நிறுவனங்களை பாதுகாக்கும் பொறுப்பு பாதுகாப்புப் பிரிவுக்கு காணப்படுகின்றது. அவர்கள் அதன்படியே செயற்படுகின்றனர். அவர்கள் ஒருபோதும் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதில்லை. அது குறித்து தெளிவான ஆலோசனைகளை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்கியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் சில குழுக்கள் பிரச்சனைகளை ஏற்படுத்தி ,அதனூடாக தனி நபர்களுக்கு அல்லது குழுக்களுக்கு இடையில் குழப்பங்களை ஏற்படுத்தி அரசியல் இலாபத்தை தேடுவதே அவர்களின் தேவையாக உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
சில ஆர்ப்பட்டங்களின்போது, பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல்களை நடத்துகின்றனர். இவை அனைத்தையும் அவர்கள் பொறுமையாக கையாண்டனர். இதற்காக பொலிஸர் மற்றும் இராணுவத்தினருக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
இதேவேளை, கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் டீசல் தட்டுப்பாடு நிலையை நாம் அறிகின்றோம். ஆனால் நாட்டில் போதுமான அளவு பெட்ரோல் கையிருப்பு காணப்பட்டது. தற்போதும் காணப்படுகின்றது. இருப்பினும் கடந்த சில நாட்கள் பெட்ரோல் விநியோகிக்கும் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. அத்துடன், பெட்ரோல் கொள்வனவு செய்வதற்காக நீண்ட வரிசைகளும் காணப்படுகின்றன. நாட்டில் டீசல் தட்டுப்பாடு காணப்பட்டபோதிலும், பெட்ரோல் தட்டுப்பாடு இருக்கவில்லை என்றும், அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் சிலர் திட்டமிட்டே பெட்ரோலை விநியோகிக்காது பதுக்கி; வைத்துள்ளார்கள் என்பது தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்துள்ளன. எனவே பெட்ரோல் விநியோகம் தொடர்பாக கண்காணிப்பதற்கும், முறையான விநியோக பொறிமுறையை ஒழுங்குபடுத்துவதற்குமான உதவியை பெறுவதற்பாக பாதுகாப்புப் பிரிவை நாடவேண்டியுள்ளது. இது பொது மக்களின் நன்மைக்காக மேற்கொள்ளப்படுவதே தவிர, மனித உரிமைகளை மீறுவதற்காக அல்ல என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.