சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். தமிழக மின் வாரிய ஒப்பந்த விவகாரம் குறித்து ஆளுநரிடம் விளக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மின் வாரியம் ரூ.4,442கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைமுறைகேடாக தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, “மின் வாரியத்தின் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் அண்ணாமலை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.
இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று காலை 11.30 மணி அளவில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, பாஜக மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் வி.பி.துரைசாமி கூறியதாவது: தமிழக நலன், சட்டம் ஒழுங்குகுறித்து ஆளுநரிடம் அண்ணாமலை பேசினார். மின் வாரியத்தின் ஒப்பந்தத்தை பெற்றுள்ள தனியார்நிறுவனம் குறித்தும் தெளிவானவிளக்கத்தையும், அறிக்கையையும் ஆளுநரிடம் வழங்கியுள்ளோம். எங்களது கோரிக்கையை கேட்டறிந்த ஆளுநர் அதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளுநர் உடனான சந்திப்பு குறித்து அண்ணாமலை வெளியிட்ட முகநூல் பதிவில், ‘‘தகுதியே இல்லாத தனியார் நிறுவனத்துக்கு ரூ.4,442 கோடி ஒப்பந்தத்தை தமிழக மின் வாரியம் வழங்கியுள்ளது. இதனால், தமிழகத்தில் இனி அடிக்கடி மின்வெட்டு வரலாம்.
இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை, நமது கட்சித் தலைவர்களுடன் சந்தித்து சில பிரச்சினைகள் குறித்து விளக்கினோம். ஆளும் திமுக அரசு அனைத்து விதிகளையும் மீறி சமீபத்திய மின் திட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக இருப்பது குறித்து ஒரு குறிப்பை வழங்கினோம்’’ என்று தெரிவித்துள்ளார்.