புதுடில்லி:’கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும்’ என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா உச்சி மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நடந்த இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பங்கேற்றனர்.இதில் விவாதிக்கப்பட்டது தொடர்பான கூட்டறிக்கையை நம் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் மற்றும் மனிதகுல பிரச்னைகள் உடனடியாக முடிவுக்கு வரவேண்டும். ஐ.நா. மற்றும் சர்வதேச சட்டங்கள் வரையறுத்துள்ள விதிகளுக்கு உட்பட்டு மற்ற நாடுகளின் இறையாண்மையை மதித்து அனைத்து தரப்பினரும் நடக்க வேண்டும்.இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய தொடர்ந்து இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர். அதேபோல் அமெரிக்கா மற்றும் ஜப்பானும் இணைந்துள்ள ‘குவாட்’ அமைப்பின் வாயிலாக சர்வதேச பிரச்னைகளில் ஒருங்கிணைந்து செயல்படவும் இரு தலைவர்களும் உறுதி எடுத்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement