வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளை தொடங்க தயங்கிவந்த நிலையில், தற்போது இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த உயர் கல்வி மையங்கள் இங்கு தங்கள் கல்வி மையங்களைத் திறக்க ஆர்வம் காட்டியுள்ளன.
தேசிய கல்விக் கொள்கையின்படி, உலகத் தரம் வாய்ந்த கல்வி மையங்களின் கிளைகளை இந்தியாவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டின்போது அறிவித்தார். குஜராத்தில் உருவாக்கப்படும் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிஃப்ட்) மூலம் வெளிநாடுகளில் உள்ள தரம்வாய்ந்த உயர் கல்வி மையங்களுக்கு இடம் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டு இந்திய மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் கல்வி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
ஆனால், சர்வதேச அளவில் உள்ள உயர் கல்வி மையங்கள் இந்த முயற்சிக்கு ஆர்வம் காட்டாமல் இருந்தன. கல்வித் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தும் ஒரு நிறுவனம் கடந்த ஆண்டு உலகின் தரம்மிக்க பல்கலைக்கழகங்களிடம் ஆய்வு மேற்கொண்டது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த 43 பல்கலைக்கழகங்களிடம் நடத்திய ஆய்வில், அவர்கள் இந்தியாவில் கிளைகள் தொடங்க ஆர்வம் காட்டாதது தெரியவந்தது. இங்குள்ள மாணவர்களின் மனநிலை, கல்விக்கட்டண உச்சவரம்பு, அரசின் கெடுபிடிகளே அவர்களின் தயக்கத்திற்கு காரணம் என தெரியவந்தது.
குஜராத்தில் உருவாகும் ‘கிஃப்ட்’ மையத்தில் சர்வதேச கல்வி மையங்கள் தங்கள் கிளையை துவங்கினால் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் தேவையான உதவிகளை அரசு வழங்கும் என்றும், ஒற்றைச்சாளர முறையில் ஒப்புதல் பெற்றாலே போதுமானது என்றும் மத்திய அரசு சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கல்வி மையமும், இத்தாலியைச் சேர்ந்த இஸ்டிடியூடோ மரங்கோனி என்ற மையமும் இந்தியாவில் கிளை தொடங்க முன்வந்துள்ளன. இத்தாலியைச் சேர்ந்த கல்வி மையம் அந்நாட்டில் மிலன் நகரில் அமைந்துள்ள நாகரிக ஆடை வடிவமைப்புக்கு புகழ்பெற்ற தனியார் கல்வி நிறுவனம் என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்கார் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கல்வி பெற இந்திய மாணவர்கள் லட்சக்கணக்கில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் நிலையில், சர்வதேச கல்வி நிறுவனங்கள் இந்தியாவைத் தேடிவரும் முயற்சியின் முதல்படியாக இரண்டு உயர் கல்வி மையங்கள் ஆர்வம் காட்டியிருப்பது இந்திய உயர் கல்வித் துறை வளர்ச்சியின் மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.