கொழும்பு:
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் பல்வேறு பொருட்கள் இறக்குமதி தடைப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள், எரி பொருள், மருந்து, சமையல் கியாஸ் சிலிண்டர் போன்றவற்றின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு சென்று விட்டது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை சமீபத்தில் இந்தியாவிடம் கடனுதவி கேட்டது. இதையடுத்து இலங்கைக்கு ரூ.,7500 கோடியை கடன் வழங்கியது.
இந்த நிலையில் இந்தியாவை தொடர்ந்து சீனாவிடமும் இலங்கை அரசு கடனுதவி கேட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 20.5 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் ரூ.19 ஆயிரம் கோடி) கடனாக சீனாவிடம் இலங்கை கோரி உள்ளது.
இது குறித்து இலங்கைக்கான சீன தூதர் குய் ஜென்ஹாங் கூறும்போது, ‘‘இலங்கை அரசிடம் இருந்து கடன் கேட்டு கோரிக்கை வந்துள்ளது. இது தொடர்பாக சீனா பரிசீலித்து வருகிறது. இலங்கைக்கு உதவி அளிக்கும் போது அந்த சூழ்
நிலையை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளமாட்டோம்.
கடன் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க உதவி செய்வதே குறிக்கோள் ஆகும். அதற்காக வெவ்வேறு வழிகளை எதிர்நோக்கி இருக்கிறோம்’’ என்றார்.
சீனா- இலங்கை இடையே தற்போது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்தானால் சீன சந்தைகளில் இலங்கையின் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும் என்று சீன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கனவே இலங்கைக்கு சீனா கடனை வழங்கி உள்ளது. மேலும் அங்கு பல்வேறு முதலீடுகளை செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… நீட் தேர்வில் கிராமப்புற மாணவர்கள் பற்றிய விவரங்கள் இல்லை- தேசிய தேர்வு முகமை