இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ.1.81 கோடியை இழந்த விக்னேஷ்

1992ம் ஆண்டு முதல் சினிமாவில் நடித்து வருகிறவர் விக்னேஷ். உழவன், கிழக்கு சீமையிலே, நாடோடி மன்னன், பசும்பொன், மண்ணுக்கு மரியாதை உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்தார். தற்போது சீரியல்களிலும் நடிக்கிறார்.

விக்னேஷ் இரிடியம் மோசடி கும்பலிடம் 2 கோடி ரூபாய் வரை ஏமாந்துள்ளார். இதுகுறித்து அவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

நான் 30 வருடங்கள் சினிமாவில் நடித்து வருகிறார். இதுதவிர சொந்தமாகவும் தொழில் செய்கிறேன். எனது கடையில் வாடகைதாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் நட்பு ரீதியில் பழகினார். இரிடியம் விற்கும் தொழிலை சட்டபூர்வமாக செய்வதாக சொன்னார். அதில் முதலீடு செய்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறினார்.

என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.500 கோடியாக உங்களுக்கு திருப்பி தருகிறேன் என்றும் நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார். ராம்பிரபுவின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும் ரூ.1.81 கோடி கொடுத்தேன். அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார். என்னைப்போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோல் பணம் வசூலித்திருப்பது தெரிய வந்தது. யாருக்கும் சொன்னபடி பணம் கொடுக்கவில்லை என்பதும், அவர் மோசடி பேர்வழி என்றும் தகவல் வந்தது.

இதற்கிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். என்னைப்போல 500 பேரிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறேன். அவர் மீதும், அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் நடிகர் விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.