ராமேசுவரம்: இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், படகு மூலம் மீண்டும் அகதிகளாக 2 குடும்பத்தினர் ராமேஸ்வரம் வந்தனர்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்கு வகிப்பது அந்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், மலையங்களில் உள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் ஆடை உற்பத்தி ஆகும். உலகளாவிய கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையில் சுற்றுலா, தேயிலை உற்பத்தி மற்றும் ஆடை தயாரிப்பு ஆகிய மூன்றும் முற்றிலுமாகப் பாதிப்படைந்தது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன் படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவையும் சந்திக்கத் துவங்கியது. தொடர்ந்து இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு முட்டை ரூ.36, தேநீர் ரூ.100, அரிசி ரூ.200, வெங்காயம் 250, கோழி இறைச்சி ரூ.1,000க்கும் விற்கப்படுகிறது.
இலங்கையின பொருளாதார நெருக்கடி எதிரொலி காரணமாக தனுஷ்கோடி அருகே நான்காம் மணல் தீடை பகுதியில் அகதிகளாக குழந்தைகளுடன் இரண்டு குடும்பத்தினர் திங்கட்கிழமை அதிகாலை படகில் வந்து இறங்கினர்.
நான்காம் மணல் தீடை பகுதியில் அகதிகள் சிலர் வந்திறங்கி உள்ளதாக அந்தப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல்படையினர் ஹோவர் கிராஃப்ட் படகின் மூலம் தீடையில் இருந்த 6 பேரையும் மீட்டு மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையினரின் முகாமிற்கு கொண்டு வந்து மெரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மெரைன் போலீஸின் விசாரணையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கஜேந்திரன் (24) இவர் ஈரோடு மாவட்ட அகதிகள் முகாமிலிருந்து 2016-ம் ஆண்டில் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்கு திரும்பியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்நத் மேரி கிளாரி (24)யை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு நிசாந்த் என்ற நான்கு மாத குழந்தை உள்ளது. மேலும் 2016-ல் குடியாத்தம் அகதிகள் முகாமிலிருந்து இலங்கையில் உள்ள மன்னார் மாவட்டம் சிலாபத்தைத்திற்கு திரும்பியவர் தியோரி (28). கணவர் அவரை கைவிட்ட நிலையில் தனது 9 வயது குழந்தை எஸ்தர், 4 வயது குழந்தை மோசஸ் ஆகியோருடன் வந்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக குழந்தையின் பால் பவுடர் உள்பட அரிசி, பருப்பு, கோதுமை, பிரட், எரிவாயு, மண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாலும், வேலை வாய்ப்பும் குறைந்துள்ளதால் குழந்தைகள் உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அகதிகளாக மீண்டும் தலைமன்னார் பேசாலையிலிருந்து கையில் இருந்த பணத்தைக் கொடுத்து தமிழகத்திற்கு வந்ததாக விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும், மண்டபம் மெரைன் போலீசார் பாஸ்போர்ட் தடை சட்டத்தின் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.