உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த சில நாளாகத் தொடர்ந்து போர் நடைபெற்றுவருகிறது. உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், ரஷ்யா அதைப் பொருட்படுத்தாமல் உக்ரைனில் தொடர் தாக்குதலை நடத்திவருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராகப் பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்த விவகாரத்தில், இந்தியா ரஷ்யாவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல், அமைதியான முறையில் இருநாடுகளும் தங்கள் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முன்வரவேண்டும் என்பதை தொடர்ச்சியாக சொல்லி வருகிறது. இதனிடையே ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய்யை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கு அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் வாஷிங்டனில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜோ பைடன் பேசியதாவது, ”ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் குவாட் அமைப்பில் உள்ள ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மிகவும் உறுதியாக உள்ளன. ஆனால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும், ரஷ்ய அதிபர் புதினை எதிர்கொள்வதிலும் அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா மட்டும் சற்று நடுங்குகிறது. புதின் நேட்டோவைப் பிளவுபடுத்த முடியும் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ஆனால் நேட்டோ ஒற்றுமையாக இருக்கும் என்றும் அவர் நினைக்கவில்லை” என்றார்.