வாஷிங்டன் : ஆப்கானிஸ்தான் முன்னாள் நிதி அமைச்சர் காலித் பயெண்டா ‘ஊபர்’ கார் டிரைவராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ‘ஊபர்’ கார் டிரைவராக இருப்பவர் காலித் பயெண்டா. இவர் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் முன்னாள் நிதி அமைச்சர்.கடந்த ஆண்டு ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றுவதற்கு ஒரு வாரம் முன் காலித் பயெண்டாவுக்கும் அப்போதைய பிரதமர் அஷ்ரப் கனிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆக. 10ல் காலித் பதவி விலகினார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ‘ஆப்கன் நிதி அமைச்சராக இருந்தது மிகப்பெரிய கவுரவம். தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுகிறேன்’ என கூறி இருந்தார்.பின் தான் கைதாகலாம் என்ற அச்சத்தில் அவர் குடும்பத்துடன் அமெரிக்கா புறப்பட்டார். வாஷிங்டனில் குடியேறிய அவர் ‘ஊபர்’ கார் டிரைவராக உள்ளார்.
பல கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்த அவர் தினந்தோறும் ஆறு மணி நேரப் பணிக்கு 11 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளம் பெறுகிறார்.இதுகுறித்து அவர் கூறும்போது ‘வாழ்க்கையில் மாறுதல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது என் குடும்பத்தை காப்பாற்ற வழி கிடைத்துள்ளதற்கு நன்றி’ என்றார்.
Advertisement