’எனக்கு மோடியைத் தெரியும்’ என பொய் சொன்ன ஒரு மோசடி நபரை நம்பி கோடியை இழந்து நிற்கிறார் நடிகர் விக்னேஷ்
`இரிடியம் விற்பனை மூலம் கோடிக் கணக்கில் பணம் சம்பாதிக்கலாம்’ இந்த இரிடிய விற்பனையை நான் சட்டபூர்வமாக அதாவது மத்திய அரசின் அனுமதியுடன் செய்கிறேன். முதலில் சில பல லட்சங்களை இதில் முதலீடு செய்பவர்களுக்கு கோடிகளில் ரிட்டர்ன் கிடைக்கும்’ என அந்த நபர் சொன்னதை நம்பி தான் மட்டுமல்லாது தன் நண்பர்கள் சிலரின் பணத்தையும் அந்த நபரிடம் கொடுத்து இழந்திருக்கிறார்.
என்ன நடந்தது என விக்னேஷிடம் பேசினேன்.
‘’ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கமுள்ள கிருஷ்ணன் கோவில் அவரது ஊர். சென்னையில என் கடைககு வந்து எனக்கு அறிமுகமானார். அவரோட கார்ல மத்திய அரசு முத்திரை இருக்கும். பந்தாவா வலம் வருவார். சுத்தி எந்நேரமும் செக்யூரிட்டி இருப்பாங்க இதையெல்லாம் பார்த்து அவரை வி.ஐ.பின்னு நம்பினேன்.
இரிடிய விற்பனை பத்தி எங்கிட்டச் சொன்னார். நம்பி ஒண்ணே முக்கால் கோடி கொடுத்தேன். என்னுடைய நண்பர்கள் சிலர் என் மூலமா சில லட்சங்கள் கொடுத்தாங்க. பணம் அவர் கைக்கு மாறினதும் ஆள் நடவடிக்கை மாறுச்சு. எங்களை நேரில் சந்திக்க மறுத்தார். அதன் பிறகே ஒருகட்டத்துல மோசடி பேர்வழின்னு தெரிய வந்தது.
தமிழ்நாடு முழுக்க பலபேர்கிட்ட பணம் வசூல் பண்ணிட்டிருக்கார்னு தெரியவந்ததும், முதல்ல என் நண்பர் பணம் பத்து லட்சத்தை மட்டும் கஷ்டப்பட்டு வாங்கிட்டோம். என் பணம் கிடைக்கலை. இப்ப அந்த நபரை போலீஸ் கைது செய்துட்டாங்க. இதே இரிடிய மோசடி வழக்குலதான்.
மோசடியாக என்கிட்ட இருந்து பறிபோன எங்க பணம் திரும்பக் கிடைக்குமா தெரியலை. இப்ப போலீஸ்ல கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி கொலை மிரட்டல் வேற விடுக்கிறாங்க அவரது ஆட்கள். காவல் துறை இதுல தீவிரமா நடவடிக்கை எடுத்து எங்க பணம் கிடைக்க வழி செய்றதோடு இந்த மாதிரி மோசடி ஆசாமிகள் உருவாவதை ஆரம்பத்துலயே தடுக்கணும்’ என்கிறார் விக்னேஷ்.