கீவ்:
உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதல்களால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்தது.
உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் படித்து வந்தனர். உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் 5-வது மற்றும் இறுதியாண்டு மருத்துவ மாணவர்களுக்கான கட்டாய தேர்வு ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
மேலும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான கே.ஆர்.ஓ.கே-1 தேர்வை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளதாக உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன.
இறுதியாண்டு கே.ஆர்.ஓ. கே-2 தேர்வு எழுதாமலேயே மருத்துவ படிப்பிற்கான சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு குறித்து இந்தியா திரும்பிய மாணவர்களுக்கு உக்ரைன் நாட்டு பல்கலைக்கழகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உக்ரைனில் மருத்துவ படிப்பு இறுதியாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.