கரூர்: ரூ.10 லட்சம் காசோலை மோசடி வழக்கில் முன்னாள் எம்எல்ஏவுக்கு கரூர் விரைவு நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு அம்பாள் நகரைச் சேர்ந்வர் கே.ராமசந்திரன். இவரிடம் கிருஷ்ணராயபுரம் முன்னாள் எம்எல்ஏ செ.காமராஜ். அதிமுக சார்பில் கடந்த 2011ல் வெற்றிப்பெற்ற இவர், அதிமுகவிலிருந்து விலகி கடந்த தேர்தலுக்கு முன் திமுகவில் இணைந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி குடும்பச்செலவு மற்றும் தொழில் நிமித்தமாக பிராமிசரி நோட்டு கொடுத்து ரூ.1 வட்டிக்கு ரூ.10 லட்சம் கடன் பெற்றார்.
ஆனால், அசலையும், வட்டியையும் காமராஜ் திரும்ப தரவில்லை. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதியிட்ட ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி அதில் அசல் மற்றும் வட்டியைத் தொகை எடுத்துக்கொள்ளுமாறும், மீதமுள்ள தொகையைச் செலுத்தி பிராமிசரி நோட்டை திரும்பப் பெற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணமின்றி திரும்பி வந்துள்ளது.
இதையடுத்து, முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மீது கரூர் விரைவு நீதிமன்றத்தில் ராமச்சந்திரன் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் காமராஜ் ஆஜராகததால் நீதிபதி சரவணபாபு, முன்னாள் எம்எல்ஏ காமராஜ்க்கு இன்று (மார்ச் 22ம் தேதி) பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.