பெங்களூரு-உக்ரைன் நாட்டிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள், கர்நாடகாவில் உள்ள 60 மருத்துவக் கல்லுாரிகளில், இலவசமாக கல்வி கற்க அனுமதி அளிக்கவும், மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் வடிவமைக்கும் வகையில் உயர்மட்ட கமிட்டி அமைக்கவும், சுகாதார துறை அமைச்சர் சுதாகர் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.உக்ரைனில் சிக்கி தவித்த கர்நாடக மருத்துவ மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் எதிர்கால கல்வி குறித்து பெற்றோரும், மாணவர்களும் கவலையில் இருந்தனர்.இந்நிலையில், பெங்களூரு விதான் சவுதாவில், சுகாதார துறை அமைச்சர் சுதாகர் உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுடன் நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார்.கூட்டத்துக்கு பின் அவர் கூறியதாவது:உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. கர்நாடக மாணவர்கள் பத்திரமாக மாநிலத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து திரும்பியுள்ள மருத்துவ மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, நம் மாநிலத்திலேயே அவர்கள் மருத்துவ கல்வியை இலவசமாக தொடர கர்நாடக அரசு அனுமதி அளிப்பது என்ற முக்கிய முடிவை எடுத்து உள்ளது.இந்த மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதல் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ்., வரை, மாநிலத்தின் 60 மருத்துவக் கல்லுாரிகளில் கல்வி கற்க அனுமதி அளிக்கப்படும். இந்த மாணவர்கள் அந்தந்த ஆண்டு படிப்பை இங்கே தொடர்வர். இதற்காக மருத்துவ கல்வி துறையின் முதன்மை செயலர், இயக்குனர்கள், சில மருத்துவ கல்லுாரி டீன்கள் அடங்கிய உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.அந்தக் குழு, உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்தும், விதிமுறை மாற்றம் தொடர்பான மத்திய அரசுக்கான கோரிக்கைகளைத் தயாரிக்கும். இந்த கோரிக்கைகள் மத்திய அரசு மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் வைக்கப்படும்.மாணவர்கள் பத்திரமாக திரும்பியது பெரிய அதிர்ஷ்டம். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி அதிக அக்கறை காட்டினார். மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும். அனைவரும் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். மாணவர்களும் கல்வி பற்றி கவலைப்பட்டனர்.அரசின் முடிவை மாணவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மருத்துவக் கல்வியில் மாற்றம் செய்வது குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உயர்மட்ட குழுவில் விவாதிக்கப்படும்.தற்போது, இந்த மாணவர்கள் கர்நாடக அரசு மருத்துவக் கல்லுாரிகளில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படவில்லை. ஆனால், அவர்களின் கற்றலும், பயிற்சியும் இங்கு தொடரும். எனவே, மாணவர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. கல்வியை இலவசமாக தொடரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement