காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டில் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரியின் வீட்டுக் கதவை உடைத்து, அலமாரியிலிருந்த ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புடைய நகை, ரொக்கத்தைத் திருடிய என்ஜினீயரை, குற்றம் நடந்த இரண்டே மணிநேரத்துக்குள் கைது செய்த போலீஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு ராஜா வீதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன். இவர் இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு திருவாரூரிலுள்ள உறவினரின் திருமணத்துக்கு இவர் தனது மனைவி பிள்ளைகளுடன் சென்று விட்டார். இதையறிந்த நபர் ஒருவர், அவரின் வீட்டு முன் பக்கக் கதவை உடைத்துள்ளனர். பிறகு, வீடு புகுந்து அலமாரியில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை, 25,000 ரொக்கத்தைத் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுசீந்திரன் நெடுங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரை ஏற்ற காவல் ஆய்வாளர் லெனின் பாரதி(பொறுப்பு) தலைமையில் துணை ஆய்வாளர் செந்தில்குமார்(பொறுப்பு) மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். உடனடியாக மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையில் ஈடுபட்டனர். போலீஸாரின் அதிவேக விசாரணையில் சுசீந்திரனின் பக்கத்து வீட்டிலுள்ள அவரின் உறவினர் மரைன் என்ஜினீயர் பிரசாந்த் ராஜ் என்பவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் போலீஸார் திருட்டில் ஈடுபட்ட பிரசாந்த்ராஜிடமிருந்து 14 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளியை காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புதுச்சேரி காலாபேட் மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
நெடுங்காட்டில் திருட்டு சம்பவம் நடந்த இரண்டே மணிநேரத்துக்குள் குற்றவாளியைக் கைது செய்த போலீஸாரை மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாக சைதன்யா மற்றும் எஸ்.பி.நிதின் கவுஹால் ரமேஷ் வெகுவாக பாராட்டினர்.