கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரைக்காக உத்தரகாண்ட் வழியாக புதிய சாலை! மந்திரி நிதின் கட்காரி

புதுடெல்லி,
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்களால் கைலாஷ்-மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இமயமலை உச்சியில் 19 ஆயிரம் அடி உயர மலை பகுதியை பக்தர்கள் நடை பயணமாக நடந்து சென்று தரிசனம் செய்து வருகிறார்கள்.
வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்த கைலாஷ் யாத்திரையை ஒவ்வொரு ஆண்டும், ஜூன் முதல் செப்டம்பர் வரை இரண்டு வெவ்வேறு பாதைகள் வழியாக நடத்துகிறது.
இந்த நிலையில், மானசரோவர் புனித தலத்திற்கு இனிமேல் சீனா மற்றும் நேபாளம் வழியாக பயணிக்க வேண்டிய நிலை இருக்காது. இந்தியர்கள் விரைவில் உத்தரகாண்ட் வழியாக மானசரோவருக்குச் செல்வார்கள் என்று மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து மந்திரி நிதின் கட்காரி பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது,
அவசரகாலத்தில் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்கள் தரையிறங்கக்கூடிய வசதிகளுடன் கூடிய 28 நெடுஞ்சாலைகளைஅ சாலை போக்குவரத்து துறை சார்பில் கட்டமைத்து வருகிறோம்.
டிசம்பர் 2023க்குள், சீனா அல்லது நேபாளம் வழியாக செல்லாமல், உத்தரகாண்ட் வழியாக இந்தியர்கள் கைலாஷ் மானசரோவரைப் பார்வையிட முடியும்.
இதற்காக உத்தரகண்ட் மாநிலம் பித்தோராகரில் இருந்து ஒரு பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய வழித்தடத்தால் பயண நேரம் வெகுவாக குறையும். சுமூகமாக பயணிக்கலாம்.
நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ஜம்மு காஷ்மீரில் சாலை இணைப்பை விரிவுபடுத்துகிறது, இது ஸ்ரீநகர் மற்றும் டெல்லி இடையே பயண நேரத்தை வெகுவாக குறைக்கும்
மேற்கண்ட திட்டங்களுக்கு ரூ.7,000 கோடி செலவாகும்.
தற்போது கட்டுமானத்தில் உள்ள டெல்லி- அமிர்தசரஸ்- கத்ரா விரைவுச்சாலை நிறைவுபெற்றால்,  டெல்லி மற்றும் ஸ்ரீநகர் இடையேயான பயண நேரம் 8 மணி நேரமாக குறையும்.
தற்போது நான்கு சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. லடாக் – கார்கில், கார்கில் – இசட்-மோர்,  இசட்-மோர் – ஸ்ரீநகர் மற்றும் ஸ்ரீநகரில் இருந்து ஜம்மு வரை. தற்போது சுமார் 1,000 தொழிலாளர்கள் தளத்தில் உள்ளனர். இந்த திட்டத்தை முடிக்க 2024ம் ஆண்டு வரை காலக்கெடுவை வழங்கியுள்ளேன்
தேசிய நெடுஞ்சாலைகளில் ரெயில் பாதைகள் செல்லும் இடங்களில் சாலை மேம்பாலம் போடப்படும்.உங்கள் தொகுதியில் சாலை மேம்பாலம் தேவை என்றால் எனக்கு முன்மொழியவும். நாங்கள் அதை உருவாக்குவோம்,
இந்த முயற்சியானது “சேது பாரத திட்டத்தின்” கீழ் வருகிறது, இது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ரெயில்வே கிராசிங்குகளை அகற்றும் லட்சிய திட்டமாகும். நிதித்துறை மந்திரி இந்த ஆண்டு கூடுதலாக ரூ.1,600 கோடி ஒதுக்கியதை சேது பாரத திட்டத்துக்கு ஒதுக்கியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள மோசமான சாலை தரம் மற்றும் அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கட்காரியின் அமைச்சகத்தை கண்டித்தனர். இதற்கு பதில் தரும் விதமாக அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.