"சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டை களையவே ஆணையம் அமைக்க கோரினேன்" – ஓபிஎஸ் பதில்; முழு விவரம்

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்கவேண்டும் என்று கேட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் 2ஆவது நாளாக விசாரணை நடத்தியது. திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் மருத்துவமனையில் இருந்தவாறே ஜெயலலிதா கட்சி வேட்பாளர்களுக்கான படிவத்தில் கைரேகை வைத்தார் என்றும் அது தனக்கு தெரியும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு வழங்கப்பட்ட உணவுகள் குறித்து தனக்கு தெரியாது என்றும் ஓ.பி.எஸ். வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன்பாக டிசம்பர் 5ஆம் தேதி அவரை, தாம் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் நேரில் பார்த்ததாகவும் கூறினார்.
இதற்கிடையே ஜெயலலிதாவுக்கு இதயத்தில் இருந்த பிரச்னை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆணையம் கேள்வி எழுப்பியபோது அப்போலோ தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். சிகிச்சை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என ஓ.பி.எஸ். ஏற்கனவே கூறிவிட்டதால் அது பற்றிய கேள்விகளை அவரிடம் கேட்க கூடாது எனவும் அப்போலோ தரப்பு கூறியது. மேலும் மருத்துவம் சார்ந்த கேள்விகள் கேட்கப்படும்போது மருத்துவர்களை உடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அப்போலோ தரப்பு வலியுறுத்தியது. தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஓ.பி.எஸ்.சிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.. ஜெயலலிதா மரணத்தில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும்,. பொதுமக்களிடம் சந்தேக கருத்து வலுத்ததால்தான் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.. மேலும் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளதாகவும் தெரிவித்தார்.
 ஓ.பன்னீர்செல்வத்திடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நடத்திய குறுக்கு விசாரணை விவரங்கள்:

ராஜா செந்தூர்பாண்டியன்: சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காகவே நான் ஆணையம் அமைக்கவேண்டும் என்று கூறியதாக தனியார் தொலைக்காட்சிக்கு அழைத்த பேட்டி சரிதானா.?

 ஓ.பிஎஸ்: சரிதான்

ராஜா செந்தூர் பாண்டியன்: ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா ?

ஓ.பி.எஸ்: ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும்
image

ராஜா செந்தூர் பாண்டியன்: மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டதும் நீங்கள் தான், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள்தான், இப்போது விசாரணைக்கும் வந்துள்ளீர்கள் ?

ஓ.பி.எஸ்: ஆணையம் பணித்ததால் வந்தேன் என்றார்.

ராஜா செந்தூர் பாண்டியன்: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-09-2016 முதல் 05-12-2016 வரையிலான காலத்தில் அப்போலோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது சரிதானா?

ஓ.பி.எஸ்: சரிதான்.

ராஜா செந்தூர்பாண்டியன்: சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும், அபிமானமும் உள்ளதா ?

ஓ.பி.எஸ்: சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது.
image

ராஜா செந்தூர்பாண்டியன்: விசாரணை அமைக்கப்பட்டது முதல் யாரிடமெல்லாம் என்னென்ன விசாரணைகள் நடைபெற்றது என்பது குறித்து தெரியுமா ?

ஓ.பி.எஸ்: நான் பதில் சொன்னது அனைத்தும் பத்திரிகைகளிலும்  முழுவதுமாக வந்துள்ளது. இதற்கு முன்பு நடந்த விசாரணை விவரங்கள் முழுவதுமாக வரவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.