சட்டசபை தேர்தல் முடிந்ததால் அதிரடி! பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சென்னை :உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், சட்டசபை தேர்தல் முடிந்ததால், அதிரடி நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. 137 நாட்களுக்கு பின், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் விலையும், 50ரூபாய் உயர்ந்துள்ளது. இதை கண்டித்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் நேற்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதை, லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களின் போது கடைப்பிடிப்பதில்லை.

கலால் வரி குறைப்பு

சர்வதேச சந்தையில், 2021ல் கச்சா எண்ணெய் விலை மிகவும் அதிகரித்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது.இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் அதிகரித்தது.இதையடுத்து, மத்திய அரசு, 2021 நவ., 3ம் தேதி இரவு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. அதற்கு அடுத்த நாளான, 4ம் தேதி தீபாவளி பண்டிகையன்று நாடு முழுதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 10 ரூபாயும் குறைந்தது.

மாற்றமில்லை

அன்று, தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல், 101.40 ரூபாய்க்கும்; டீசல், 91.43 ரூபாய்க்கும் விற்பனையானது. பின், அவற்றின் விலை நான்கு மாதங்களுக்கு மேலாக மாற்றப்படவில்லை.
இதற்கு காரணம், உ.பி., கோவா, பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல் மற்றும் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், புதிய அரசுகள் பொறுப்பேற்று வருகின்றன.இதையடுத்து, அதிரடி நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. நாடு முழுதும் 137 நாட்களுக்கு பின், நேற்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு
உள்ளது. இதன்படி, தமிழகத்தில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு, 76 காசு உயர்ந்து, 102.16 ரூபாய்க்கு விற்பனையானது. டீசல் விலையும் லிட்டருக்கு, 76 காசு அதிகரித்து, 92.19 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சிலிண்டர் ரூ.50 உயர்வு

தமிழகத்தில், 2021 அக்., மாதம் வீட்டு காஸ் சிலிண்டர், 915.50 ரூபாய்க்கு விற்பனையானது. அதன் விலை, நான்கு மாதங்களாக மாற்றப்படவில்லை. இம்மாதத்திற்கான சிலிண்டர் விலை, 1ம் தேதி நிர்ணயிக்கப்பட்டது.அதில், வீட்டு சிலிண்டர் விலை மாற்றப்படவில்லை. வணிக சிலிண்டர் மட்டும், 105.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 2,145.50 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திடீரென சமையல் காஸ் சிலிண்டர் விலையும் 50 ரூபாய் உயர்ந்து, 965.50 ரூபாயாக அதிகரித்து உள்ளது. வணிக சிலிண்டர் விலை, 8 ரூபாய் குறைக்கப்பட்டு, 2,137.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எதிர்க்கட்சிகள் அமளி

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ராஜ்யசபாவில் நேற்று கேள்வி நேரத்துக்குப் பின், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் காஸ் விலை உயர்வை கைவிட வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. திரிணமுல் காங்., உறுப்பினர்கள், சபையின் மையப் பகுதிக்குச் சென்று கோஷமிட்டனர்.காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களும் கோஷமிட்டனர். விலை உயர்வை திரும்பப் பெறுவது தொடர்பாக பேசுவதற்கும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

ஆனால், ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார்.தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டதால், சபை ஒத்தி வைக்கப்பட்டது. பின், சபை மதியம் கூடியபோது, எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. சபையின் மையப் பகுதியில் நின்று கோஷமிட்டதால், சபை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.இதற்கிடையே, லோக்சபாவிலும் எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை முன்வைத்து கோஷமிட்டன. கேள்வி நேரத்துக்குப் பின் பேச அனுமதிப்பதாக, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். அதை ஏற்க மறுத்து கோஷமிட்ட எதிர்க்கட்சிகள், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தன.

* நழுவிய சாதனை

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில், ராஜ்யசபா தொடர்ந்து, 12 நாட்கள் எவ்வித ஒத்திவைப்பும் இல்லாமல் செயல்பட்டுள்ளது. நேற்று எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைக்க நேரிட்டது.கடந்த 2019 மழைக்கால கூட்டத் தொடரில், தொடர்ந்து 13 நாட்கள் எவ்வித ஒத்திவைப்பும் இல்லாமல் ராஜ்யசபா இயங்கியதே, இதுவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை, ராஜ்யசபா நேற்று இழந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.