பெங்களூர-”விவசாயிகள் விளைவித்த சந்தன மரங்களுக்கு வனத்துறை அதிகாரிகள் நியாய விலை நிர்ணயிக்காதது குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,” என சட்ட மேலவையில், காங்கிரஸ் வலியுறுத்தியது.சட்ட மேலவை கேள்வி நேரத்தில், காங்., உறுப்பினர் ரவி பேசியதாவது:மாநிலத்தில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் சந்தன மரங்கள் வளர்த்துள்ளனர்.ஒவ்வொரு மரத்துக்கும் வனத்துறை அதிகாரிகள், 1.177 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர்.நிலத்தை கையகப்படுத்தும் போது, 10 ஆண்டுகளான மரங்களுக்கு, 2.40 லட்சம் ரூபாய் விலை நிர்ணயிக்க வேண்டும் என, சமீபத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வனத்துறையினர் மிகவும் குறைந்த விலை நிர்ணயித்துள்ளனர்.முருங்கை மரத்துக்கு 5,000 ரூபாய்; ரோஜா செடிக்கு 3,500 ரூபாய் விலை நிர்ணயித்துள்ளனர். வனத்தில் வளர்த்த 15 ஆண்டு வயதுள்ள சந்தன மரத்தின் விலை 3 கோடி ரூபாயாக உள்ளது. ஆனால் விவசாயிகள் வளர்த்த மரத்துக்கு குறைந்த விலை நிர்ணயித்திருப்பது சரியல்ல. இது விவேகமற்ற செயல். இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதற்கு பதிலளித்து வனத்துறை அமைச்சர் உமேஷ் கத்தி கூறியதாவது:ஐந்தாண்டு சராசரி விற்பனை அடிப்படையில், சந்தன மரத்துக்கு விலை நிர்ணயித்துள்ளனர். ஒரு கிலோ சந்தன கட்டை விலை, 13 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உள்ளது.சந்தன மரங்கள் தொடர்பான விதிமுறைகளில், இரண்டு, மூன்று மாதங்களில் மாற்றம் கொண்டு வரப்படும். வரும் நாட்களில், விவசாயிகள் தாங்கள் விளைவித்த சந்தன மரத்தை, வெளி மார்க்கெட்டில் விற்க வாய்ப்பளிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement