சித்தூர் அருகே இன்று காலை கார் கவிழ்ந்து விபத்து 30 செம்மரக்கட்டைகள் பறிமுதல்

திருமலை: சித்தூர் அருகே இன்று காலை செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கடத்தி வந்த 30 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் அதிகளவு செம்மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றை கடத்தல்காரர்கள் கூலியாட்களை வைத்து வெட்டி கடத்திச்செல்கின்றனர். இந்த செம்மரக்கட்டைகள் வெளிநாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. இதில் சர்வதேச கடத்தல்காரர்கள் செயல்படுகின்றனர். இதற்காக ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள அப்பாவி மக்களுக்கு அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி செம்மரக்கடத்தலில் ஈடுபட வைக்கின்றனர். அவ்வாறு கடத்தலில் ஈடுபடும் அப்பாவி மக்கள் போலீசாரிடம் சிக்கி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் ஆந்திரா, தமிழகத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் செம்மரக்கடத்தலை தடுக்க போலீசாரும், வனத்துறையினரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். என்றாலும் செம்மரக்கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில் சித்தூர் மாவட்டம் கட்டகிண்டப்பள்ளி சாலையில்  உள்ள  வளைவில் இன்று காலை ஒரு கார் வேகமாக வந்தது. வளைவில் திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் வந்தவர்கள் இடிபாட்டில் சிக்கிக்கொண்டனர். ஆனாலும் அவர்கள் உடனடியாக காரில் இருந்து தப்பியோடிவிட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் கங்காதரநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் எஸ்.ஐ. சுமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்துக்குள்ளான காரை சோதனை செய்தபோது அதில் 30 செம்மரக்கட்டைகள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், திருப்பதியில் இருந்து செம்மரக்கட்டைகளை வெட்டி கடத்தி வந்தபோது கார் விபத்துக்குள்ளானதும் தெரியவந்தது. இதையடுத்து செம்மரக்கட்டைகளுடன் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் பாலையா, செம்மரக்கட்டைகளை கடத்தியவர்கள் யார்? இவை எங்கு கடத்தப்படுகிறது? என விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தப்பி ஓடியவர்களையும் தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.