மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு 2019-ல் உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்ததையடுத்து, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் மீண்டும் விசாரணையைத் தொடங்கியிருந்தது. அதில் முதற்கட்டமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவர்களிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தபடி, இளவரசி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜராக, இவர்களிடம் விசாரணை நடத்தியது ஆறுமுகசாமி ஆணையம். இரண்டாவது நாளாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. மேலும் இதில், ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான அனைத்து விசாரணையும் இன்றுடன் முடிந்தது.
விசாரணை முழுமையாக முடிவடைந்த பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “விசாரணை தொடர்பாக 7 முறை சம்மன் அனுப்பப்பட்டு, 6 முறை எனக்குக் கடிதம் வந்து சேர்ந்தது. அதில் 2 முறை, சொந்த காரணங்களுக்காகவும், பட்ஜெட் தாக்கல் காரணமாகவும் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியவில்லை. அது தொடர்பாக ஆணையத்துக்கு கடிதமும் அனுப்பியிருந்தேன். ஆறுமுகசாமி ஆணையத்திடம் முரண்பட்ட பதில் எதையும் நான் தெரிவிக்கவில்லை. விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விகளுக்கு உண்மையாக பதிலளித்தேன். ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் முழு திருப்தியும், நிறைவும் உள்ளது. பொதுமக்களின் கருத்தாக சந்தேகம் இருக்கிறது என்று கூறிதான் முதன்முதலாக நான் பேட்டி கொடுத்தேன். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு சின்னம்மா அவர்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் நிரூபித்திருந்தால், அவர்கள் மேல் இருக்கிற குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன். எனக்கு தனிப்பட்ட முறையில் சின்னம்மா அவர்கள் மீது தனிப்பட்ட மதிப்பும் மரியாதையும் உண்டு” என்றார்.