ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக ஆஜரான ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தபோது தனிப்பட்ட முறையில் சின்னம்மா மீது தனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு என்று பேட்டியளித்தார்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கபட்ட ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் 2வது நாளாக இன்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். காலை, மாலை என இருவேளைகளிலும் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அரசின் சார்பாக நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதில் அளித்திருக்கிறேன். உண்மையான பதிலை அளித்திருக்கிறேன்.” என்று பேட்டியளித்தார்.
பலமுறை சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “7 தடவை சம்மன் அனுப்பப்பட்டு 6 முறை எனக்கு கடிதம் வந்தது. அதில் 2 முறை சொந்த காரணத்தாலும் ஒரு முறை பட்ஜெட் காரணத்தாலும் ஆஜராக முடியவில்லை. 8 முறை சம்மன் என்பது தவறான கருத்து” என்று விளக்கம் அளித்தார். நேற்று ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறிவிட்டு, இன்று எக்மோ அகற்றும் முன் பார்த்ததாக கூறியதன் காரணம் குறித்து கேட்டபோது, “எக்மோ கருவியை அகற்றுவதற்கு முன்பு தான் பார்க்க அனுமதித்தார்கள். ஆனால் அதற்கு முன்பு இருந்த 74 நாட்களும் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்றுதான் இன்றும் கூறியுள்ளேன். இதில் முரண்பாடு எதுவும் இல்லை” என்று கூறினார்.
மேலும் அவர் “எனக்கு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறவில்லை. மக்களுக்கு சந்தேகம் இருப்பதாகத்தான் கூறினேன். அந்த சந்தேகத்தை போக்குவதற்கும் சின்னம்மாவிற்கு (சசிகலா) வாய்ப்பு இருக்கிறது. அப்படி சந்தேகத்தை போக்கினால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நீக்கப்படும்” என்று கூறினார்.
ஆணையத்தின் விசாரணை முழு திருப்தியாக இருந்தது என்று கூறிய பன்னீர்செல்வம் , சசிகலா தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது மீண்டும் “தனிப்பட்ட முறையில் சின்னம்மா(சசிகலா) அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு” என்று தெரிவித்தார். வெகு நாட்களுக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் இரண்டு முறை சசிகலாவை சின்னம்மா என்று அழைத்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் “உங்களுக்கு தனிப்பட்ட வகையில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா என்று நான் கேட்டதற்கு இல்லை என்று ஓ பன்னீர்செல்வம் கூறினார். மக்கள் சந்தேகத்தை போக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும் சசிகலா மீது எந்த காலத்திலும் எனக்கு சந்தேகம் இல்லை என்றும் கூறினார். இன்று அவர் சொன்ன விஷயங்களில் முரண்பாடோ, சசிகலா மீதான குற்றச்சாட்டோ பதிவு செய்யப்படவில்லை” என்று பேட்டியளித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM