பெய்ஜிங்: சீனாவில் பயணிகள் விமானம் மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங்கில் இருந்து ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம், குவாங்டாங் மாகாண தலைநகர் குவாங்சூவை நோக்கி நேற்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டது. அதில் 123 பயணிகள் மற்றும் 9 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில், வூஸூ நகரை ஒட்டிய வான் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அந்த விமானம் அப்பகுதியில் உள்ள மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் விமான விபத்து குறித்த காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில், விமானம் விழுந்த இடத்தில் இருந்த மரங்கள் தீப்பிடித்து எரிவதும் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிப்பதும் பதிவாகி இருந்தது.
இதனிடையே, விபத்தை நேரில் பார்த்த மலைக் கிராமவாசி ஒருவர் கூறும்போது ‘‘விமானம் விழுந்தவுடன் பெரும் சத்தம் கேட்டது. அந்தப் பகுதியே தீப்பிழம்பும் புகையுமாக மாறியது. சிறிது நேரத்தில் மூங்கில் காட்டில் தீ வேகமாகப் பரவியது’’ என்றார்.
விபத்து நடந்த பகுதியின் சுற்று வட்டாரத்தில் விமானத்தின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. விபத்து நடந்த சிறிது நேரத்தில், ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது இணையதள பக்கத்தை கருப்பு-வெள்ளை நிறத்தில் மாற்றியது.
சரியாக மதியம் 2.15 மணிக்கு விமானம் விபத்துக்குள்ளானதாக ஃப்ளைட் ரேடார் 24 கணித்துள்ளது. 29,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம், திடீரென 9,075 அடி உயரத்துக்கு சரிந்துள்ளது. அடுத்த 20 விநாடிகளில் 3,225 அடிக்கு சரிந்ததுடன் விமானம் தொடர்பில் இருந்து விலகியுள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
விமான விபத்து நடந்த இடத்துக்கு 600-க்கும் மேற்பட்ட மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். அடர்ந்த வனப் பகுதியில் விழுந்து தீப்பிடித்துள்ளதால் விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். எனினும், விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்டால்தான் விபத்துக்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக அமெரிக்காவின் போயிங் நிறுவன பங்குகள் 6.8 சதவீதமும் ஷாங்காயைச் சேர்ந்த ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகள் 6.4 சதவீதமும் சரிவடைந்தன.
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் விமான போக்குவரத்துத் துறை மிகவும் பாதுகாப்பானதாகவே இருந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு சீனாவின் இச்சுன் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஹெனான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 96 பேரில் 44 பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு இப்போதுதான் சீனாவில் விமான விபத்து நிகழ்ந்துள்ளது.