தருமபுரி அருகே பாலம் இல்லாததால் இறந்தவர் சடலத்தை லாரி டியூபில் கட்டி ஆற்றை கடந்து மயானத்திற்கு கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள நாகர்கூடல் பகுதிகுட்பட்ட கழனிகாட்டூரில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 30 ஆண்டுகளாக கழனிகாட்டூர் பகுதியில் நாகாவதி அணை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். எவ்வளவு கோரிக்கை வைத்தாலும் எந்தவொரு அரசாங்கமும் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காததால் இன்றுவரை அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து நாகாவதி அணையில் நீர் இருக்கும் போதெல்லாம் அப்பகுதியைச் சேர்ந்தவர் மாணவர்கள் பள்ளி கல்லூரிக்குச் செல்லவும், பணிக்கு செல்வதற்கும், கர்ப்பிணி பெண்கள் பிரசவ காலங்களில் மருத்துவமனைக்குச் செல்வதற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் வனப்பகுதியில் கரடு முரடான, பாதையில் சுற்றிச் செல்ல வேண்டும் அல்லது குறைந்த தொலைவில் உள்ள ஆற்றை கடக்க பரிசல்களில் செல்ல வேண்டும்.
இந்நிலையில், யாரேனும் இறந்து விட்டால் அவர்களை, மயானத்திற்கு எடுத்துச் செல்ல ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு தான் செல்ல வேண்டும். இந்நிலையில் கழனிகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்து சின்னசாமி என்பவர் உயிரிழந்தார். தற்போது ஆற்றில் தண்ணீர் இருப்பதால், உறவினர்கள் இறுதிச் சடங்கிற்காக ஆற்றின் மறுகரையில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகமாக இருந்ததால் கொண்டு செல்ல முடியாத நிலையில், இரண்டு லாரி டியூப்களை இணைத்து அதன் மேல் சடலத்தை வைத்து ஆற்றில் நீந்தியவாறே கடந்து சென்று நல்லடக்கம் செய்தனர்.
இதுபோன்ற அபாயகரமான சூழலில் வாழ்ந்து வரும் கிராம மக்களின் நலன் கருதி, இனியாவது காலம் தாழ்த்தாமல், நாகாவதி அணையின் குறுக்கே பாலம் அமைத்து, இப்பகுதி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM