சென்சாரை மீறிய தணிக்கைகள்: தவிக்கும் திரையுலகம்!

சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு. பழனியப்பன் உள்ளிட்டேர் நடித்த ‘
கள்ளன்
‘ திரைப்படம் கடந்த 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டபோதே, குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த அமைப்புகள், ‘இப்படத்தின் தலைப்பு எங்கள் சாதியை இழிவுபடுத்துகிறது; தலைப்பை மாற்ற வேண்டும்’ என்று எதிர்த்தனர்.

அவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ‘குறிப்பிட்ட சாதிக்கும் படத்துக்கும் தொடர்பில்லை’ எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

இந்நிலையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் சந்திரா, “கள்ளன் படத்தை திரையிட்டால் திரையைக் கிழிப்போம் எனத் திரையரங்குகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கெனவே ஒப்புக்கொண்ட திரையரங்குகள் படத்தைத் திரையிட முன்வரவில்லை” என்று தனது ஆதங்கத்தை கொட்டினார். மேலும், “கள்ளன் என்ற சொல் திருட்டைக் குறிக்கும் சொல்லே தவிர, ஒரு சாதியைக் குறிக்கும் சொல் அல்ல” என்று விளக்கமும் கொடுத்தார்.

ஏன் எதிர்ப்பு?

படத்தை எதிர்க்கும் அமைப்பினர், “நாங்கள் ஆண்ட பரம்பரை. வீரம்தான் எங்கள் மூச்சு. அதே நேரம், பேச்சு வழக்கில் எங்களை வேறு பொருள்படும்படி அழைப்பர். பிறகு வலுவான கோரிக்கை வைத்து அதை மாற்றினோம். தற்போது மீண்டும் அதே சொல்வழக்கைத் தலைப்பாக வைத்து இழிவுபடுத்தி இருக்கிறார்கள். ‘கள்ளன் திரைப்படம் எந்தவொரு சாதியையும் குறிப்பிடவில்லை’ என்கிறார் படத்தின் இயக்குநர் சந்திரா. அப்படியானால் பட விளம்பரங்களில், ‘வேட்டை சமூகத்தில் பிறந்து..’ எனக் குறிப்பிடுகிறாரே.. அதற்கு என்ன அர்த்தம்? ஆக, ஏதோ ஒரு சமூகத்தை – சாதியைக் குறிப்பிடுகிறார் என்பதுதான் உண்மை!” என்கிறார்கள்.

கள்ளன்

சமூக ஆர்வலர் பழ.ரகுபதி, “தங்களாகக் கற்பிதம் செய்துகொண்டு எதிர்ப்பது என்பதை ஏற்க முடியாது. தவிர, சென்சார் செய்யப்பட்ட பிறகும், நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் இவற்றைவிட உயர்வான சக்தியாக சாதி, மத அமைப்புகள் இருப்பது வேதனை. இப்படிப் பல படங்கள் பிரச்சினையை சந்தித்து வருகின்றன” என்பவர் அதைப் பட்டியலிடுகிறார்.

“சில வருடங்களுக்கு முன் விஸ்வரூபம், சமீபத்தில் எப்.ஐ.ஆர். ஆகியவை மத ரீதியான எதிர்ப்புகளைச் சம்பாதித்தன. ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன்.. இப்போது கள்ளன் ஆகியவற்றுக்குச் சாதி ரீதியான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மெர்சல் திரைப்படம் கட்சி ரீதியான பிரச்சினையை எதிர்கொண்டது. இப்படி, சாதி, மதம், கட்சி என அரசை மீறிய அமைப்புகள் திரைத்துறையை கட்டுப்படுத்துவது ஆபத்து” என்கிறார் ரகுபதி.

படப்பிடிப்பின்போதே எதிர்ப்பு

திரையிட்ட பிறகு என்பதல்ல, படப்பிடிப்பின்பதே எதிர்ப்பு கிளம்புவதும் நடக்கிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மலைக்கோட்டையில் நடந்தது. அங்கு புகுந்த மத அமைப்பு ஒன்று, “திப்பு
சுல்தான்
வரலாற்றை படமாக்குகிறீர்கள். இதில் எங்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. ஆகவே படப்படிப்பை நடத்தவிட மாட்டோம்” என்றது.

“படத்தின் பெயர்தான் சுல்தான். ஆனால் திப்பு சுல்தான் வரலாறு அல்ல” என்று படக்குழு, படாதபாடுபட்டு விளக்கிய பிறகு விவகாரம் தீர்ந்தது.

கருத்துச் சுந்திரத்திலும் பாகுபாடு?

அதே நேரம், திரைப்பட இயக்குநர் ஒருவர், “இந்த எதிர்ப்பிலும் எதிர்ப்புக்கு எதிர்ப்பிலும்கூட ஏற்றத்தாழ்வு பார்க்கப்படுகிறது. அதாவது பெரிய ஹீரோ நடித்த படத்துக்கு எதிர்ப்பு வந்தால் அது மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கிறது; அந்த எதிர்ப்புக்குக் கண்டனங்கள் குவிகின்றன. ஆனால் சிறிய படங்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் அது கவனத்துக்கு வருவதே இல்லை.

சமீபத்தில் ஆண்டனி சாமி இயக்கத்தில், விஜய் விஷ்வா உள்ளிட்டோர் நடித்த சாயம் திரைப்படம் வெளியானது. சாதி வேறுபாடு கூடாது என்கிற கருத்தைச் சொன்ன இப்படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் படத்தின் இயக்குநர், நடிகர்கள் வளர்ந்து வரும் கலைஞர்கள். ஆகவே, படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டபோது எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை” என்கிறார்.

காதுல பூ: சட்டத்தை மீறிய தண்டனைகள்!

பெயரைக் குறிப்பிட விரும்பாத திரையுலகைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் இதை மறுக்கிறார். அவர், “பிரபல நடிகரான கமல் நடித்து, தயாரித்த விஸ்வரூபம் படத்துக்குப் பிரச்சினை வந்தபோது, அவர்தான் அழுதார். அப்போது அவருக்காக வந்தவர்கள் நடிகர் சிவக்குமார் போன்ற சிலர்தான். அவர்களும் கமலுக்கு ஆறுதல் சொன்னார்களே தவிர, பிரச்சினை கிளப்பிய மத அமைப்புகளைக் கண்டிக்கவில்லை.

அப்படிப் பாதிக்கப்பட்ட கமல், ஜெய் பீம் படம் பிரச்சினைக்குள்ளானபோது, அதற்குக் காரணமான சாதி அமைப்பை கண்டிக்கவில்லை. விஸ்வரூம் பட நேரத்தில் தான் அழுதபோது ஆறுதல் சொல்ல வந்த சிவக்குமாருக்கு, நன்றிக்கடன் செலுத்திக் கணக்கை நேர் செய்தார். அவ்வளவுதான். தற்போது கள்ளன் பட விவகாரத்திலும் கமல் மவுனம் சாதிக்கிறார்.

கமல், ரஜினி

தமிழ் திரையுலகிலேயே அதிகம் சம்பளம் பெறும் ரஜினி, பஞ்ச் வசனம் பேசும் அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்டவர்களும் வாயை இறுக மூடிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் சிலர்தான், ‘நாட்டையே மாத்துவேன், புரட்சி செய்வேன்’ என திரையில் முழங்கியபடியே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என கனவு காண்கிறார்கள்” என்று வருத்தத்துடன் சொல்கிறார்.

கண்டுகொள்ளாத அரசியல் கட்சிகள்!

வழக்கறிஞர் அருள்துமிலன், “அரசியல் கட்சிகளும் இது போன்ற எதிர்ப்புகளைக் கண்டுகொள்வதில்லை. சாதி, மத அமைப்புகளுக்கு எதிராக பேசினால் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படுமோ என அஞ்சுகின்றன. ஜெய் பீம் பட விவகாரத்தின்போது சி.பி.எம். கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்தான் குரல் கொடுத்தார். அக்கட்சியின் கலை அமைப்பான த.மு.எ.க.ச.தான் கண்டனம் தெரிவித்தது” என்கிறார்.

அஜித்தை உருவ கேலி செய்தாரா ப்ளூ சட்டை மாறன்?

இப்போது கள்ளன் படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டிருக்கும்போதும், த.மு.எ.க.ச குரல் எழுப்பி உள்ளது. “கள்ளன் பட இயக்குநர் சந்திரா தங்கராஜ் இணையவழியில் புகார் செய்தும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாடு அரசு இனியும் தாமதிக்காமல் ‘கள்ளன்’ படத்தைத் திரையிடுவதற்குத் தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளது.

எதிர்க்கும் உரிமை உண்டு!

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அ.குமரேசன், “படைப்புச் சுதந்திரம் என்பது கருத்துச் சுதந்திரத்தின் ஒரு பகுதிதான். இதுதான் ஜனநாயகத்தின் ஆணி வேர். ஒரு கருத்து தங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் அதைத் தடை செய்ய நினைப்பது ஏற்கத்தக்கதல்ல.

திரைப்படம் உள்ளிட்டவற்றில், கருத்தை வெளிப்படுத்தும் உரிமையைப் போலவே, அதையெல்லாம் எதிர்க்கும் உரிமையும் உன்னதமானது. கவனிக்க – எதிர்க்கும் உரிமையைத்தான் சொல்கிறேன், தடுக்கும் உரிமையை அல்ல” என்கிறார்.

எதிர்ப்புத் தெரிவிக்கவும் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் பெறவும் சட்டப்பூர்வமான வழிகள் எத்தனையோ இருக்க, சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் எதிர்ப்பு முன்வைக்கப்படுவதுதான் இதில் மிகவும் கவலையளிக்கும் விஷயம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.