"ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை" – ஓபிஎஸ் வாக்குமூலம்

ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை என  ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்

2011-12 ஆண்டு மற்றும் அதற்கு பிந்தைய ஆண்டுகளிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது அது தொடர்பாக எவ்வித தகவலையும் காவல்துறை திரட்டவில்லை என ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்திருப்பதை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரி தான் என பதிலளித்தார்.
image

ஜெயலலிதாவை குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஜெயலலிதா தன்னை அழைத்து சட்டமன்ற உறுப்பினர்களை கூட்டி முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தேர்ந்தெடுக்கப்படுபவர் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்க வேண்டும் என கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதே நேரத்தில் பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்து, என்னிடம் தெரிவித்த கருத்தை மீண்டும் அவரிடம் தெரிவித்ததாகவும், ஓ.பன்னீர்செல்வம் தான் முதலமைச்சர் எனவும் அவர் பெயரை நீங்கள் தான் சட்டமன்ற உறுப்பினர்களிடம்  கூற வேண்டும் எனவும் ஜெயலலிதா கூறினார் என ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
image

அப்போது தான் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்ததாகவும், அதற்கு அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும் எனவும், சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் எனவும் ஜெயலலிதா கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.