மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அது குறித்து விசாரிக்கக் கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் இரண்டாவது நாளாக அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். இந்த நிலையில், இன்று ஆணையத்தில் ஆஜரான ஒ.பன்னீர்செல்வத்திடம், சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது இருவருக்குமிடையே நடந்த விசாரணை உரையாடல் இதோ…
ராஜா செந்தூர்பாண்டியன்: சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டைக் களைய வேண்டும் என்பதற்காகத் தான், ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சரிதானா?
ஓ.பி.எஸ்: ஆமாம், சரிதான்!
ராஜா செந்தூர்பாண்டியன்: நான்கரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்று வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா?
ஓ.பி.எஸ்: ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை, பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும்.
ராஜா செந்தூர்பாண்டியன்: ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டதும், நீங்கள்தான், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள்தான், இப்போது விசாரணைக்கும் வந்துள்ளீர்கள்?
ஓ.பி.எஸ்: ஆம்! ஆணையம் பணித்ததால் வந்தேன்.
ராஜா செந்தூர்பாண்டியன்: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-09-2016 முதல் 05-12-2016 வரையிலான காலத்தில் அப்போலோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது தொடர்பாக விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டது சரிதானா?
ஓ.பி.எஸ்: ஆம் சரிதான்!
ராஜா செந்தூர்பாண்டியன்: சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளதா?
ஓ.பி.எஸ்: ஆம், சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது.
ராஜா செந்த்தூர்பாண்டியன்: விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது முதல் யாரிடமெல்லாம் என்னென்ன விசாரணைகள் நடைபெற்றன என்பது குறித்து தெரியுமா?
ஓ.பி.எஸ்: நான் பதில் சொன்னது அனைத்தும் பத்திரிகைகளில் முழுவதுமாக வந்துள்ளது. இதற்கு முன்பு, நடந்த விசாரணையில் முழுவதுமாக வரவில்லை
இப்படியாக முடிந்தது இருவரிடையேயான விசாரணை உரையாடல்!