'தடுப்பூசியை கட்டாயமாக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது' – தமிழக அரசு வாதம்

தடுப்பூசி போடாதவர்களே வைரஸ்கள் உருமாறுவதற்கு காரணம் என நிபுணர்கள் ஆய்வுகள் செய்து கூறியிருக்கின்றனர் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடுப்பூசியை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது எனவும்  தமிழக அரசு வாதம்  முன்வைத்துள்ளது.

2021 ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தக்கூடிய பணி தொடங்கிய நிலையில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதை கட்டாயமாக்கி உள்ளன.

தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயம் என பல மாநில அரசுகளின் உத்தரவுக்கு எதிராகவும் இதனை, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் அறிவிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பதிலளிக்க கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், இவ்வழக்கு இன்றைய தினம் மீண்டும் நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது

image
அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கொரோனா போன்ற பேரிடர்களை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 100% தடுப்பூசி மக்களுக்கு போடுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டு உள்ளது.  இதனை ஏற்று இப்பணிகளை நாங்கள் முழுமையாக செய்து வருகிறோம் என தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் “தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தடுப்பூசியை கட்டாயமாக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது” எனவும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். குறிப்பாக தடுப்பூசி போடாதவர்களால் தான் கொரோனா உருமாற்றம் அடைந்து வருவதாகவும் இதனை  நிபுணர்களின் ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளதாக தமிழக அரசு சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

அதேபோல் தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு, மற்றும் பொருளாதார இழப்பு ஆகிவற்றையும் மனதில் கொண்டு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதாகவும் வாதிட்டார். தமிழக அரசின் வாதத்தை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.

இதையும் படிக்க: கோவிஷீல்ட் – 2 டோஸ்களின் இடைவெளி குறைகிறது?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.