தமிழகத்தின் தீர்மானத்தை கண்டித்து நாமும் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் -சித்தராமையா ஆவேசம்

பெங்களூரு
கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அம்மாநில அரசு புதிதாக அணை கட்ட முயற்சித்து வருகிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என தமிழக அரசு கூறி வருகிறது.
இந்நிலையில் மேகதாது திட்டத்துக்கு ரூ.1000 கோடியை கர்நாடக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது. இதனால் தமிழகம், கர்நாடகம் இடையே கருத்து மோதல்கள் உள்ளன. கர்நாடக அரசுக்கு அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் கூட தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினார்.
இதற்கிடையே மேகதாதுவில் விரைவில் அணை கட்டுவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி வருகிறார். இதையடுத்து தமிழக சட்டசபையில் கர்நாடக அரசின் மேகதாது திட்டத்திற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான திமுகவுக்கு, எதிர்க்கட்சியான அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்தன. இதனால் தீர்மானம் எதிர்ப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை  கடும் எதிர்ப்பு தெர்வித்து உள்ளார். தமிழகத்தின் மேகதாது தீர்மானம் ஒரு அரசியல் நாடகம்  தீர்மானத்தால் சட்ட ரீதியாக எந்த ஒரு பயனும் இல்லை மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம்  என கூறினார்.
கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சி  தலைவர் சித்தராமையா இன்று பேசும் போது கூறியதாவது:-
தமிழக அரசு சட்டசபையில் மேகதாது திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது 100-க்கு 100 சதவீதம் சட்டவிரோதமானது. இதை நான் மற்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் கண்டித்து கருத்து வெளியிட்டு இருந்தோம். இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு எந்த சட்ட உரிமையும் இல்லை. அனைத்துக்கட்சிகளும் சேர்ந்து அரசியல் நோக்கத்துடன் இந்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
இந்த தீர்மானத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். காவிரி உபரி நீரை பயன்படுத்தவே மேகதாது திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதை தடுக்க தமிழக அரசுக்கு உரிமை இல்லை. நமது நிலத்தில் அணை கட்டுகிறோம். சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16-ந் தேதி இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) வழங்கும்படி உத்தரவிட்டுள்ளது. இதை உறுதி செய்ய காவிரி நிர்வாக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது
இந்த நீரை மட்டுமே பெற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 582 டி.எம்.சி. நீர் சென்றுள்ளது. இது நமது நீர். இந்த நீருக்கும், தமிழகத்திற்கும் தொடர்பு கிடையாது. நமது நீரை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துகிறோம். பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு சுப்ரீம் கோர்ட்டு 4.75 டி.எம்.சி. நீர் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதற்காக ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரித்துள்ளோம். 67.14 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையை கட்டுகிறோம். பெங்களூருவில் இன்னும் 30 சதவீதம் பேருக்கு காவிரி நீர் கிடைக்கவில்லை. நகரின் மக்கள்தொகை 1½ கோடியாக அதிகரித்துவிட்டது. நமது உரிமையை பயன்படுத்த தமிழகம் எதிர்ப்பது சரியல்ல. தமிழக அரசின் இந்த செயலை கர்நாடகம் சகித்துக்கொள்ள வேண்டுமா?.
காவிரி நீர் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தங்களால் கர்நாடகத்திற்கு தொடர்ந்து அநியாயம் ஏற்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நீர், மொழி, நிலம் பிரச்சினையில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இந்த விவகாரங்களில் அனைத்துக்கட்சிகளும் ஒற்றுமையாக செயல்படுகின்றன. அதனால் தமிழக அரசுக்கு எதிராக ஒருமித்த தீர்மானத்தை கொண்டு வந்த நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு நியாயமாக நடந்து கொண்டு இந்த திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.