சென்னை:
தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இப்போதே அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. கோடைகாலம் ஏப்ரல், மே, ஜூன் என்றாலும் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வெப்பம் அதிகரித்துள்ளது.
இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் குடிப்பதற்கு இளைஞர்கள் குவிகிறார்கள். இரு சக்கர வாகனங்களில் வெளியில் சுற்றித் திரியும் இளைஞர்கள், பணியில் ஈடுபட்டு வரும் ஐ.டி. ஊழியர்கள் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் வெயில் தாக்கத்தால் ‘ஹாட்’ மதுபானங்களை தவிர்த்து பீர் வகைகளை நாடுகிறார்கள்.
அதிலும் ரெப்ரிஜிரேட்டரில் குளிர்ச்சியூட்டப்படும் ஜில் பீர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. வெயிலின் உஷ்ணத்தை குறைக்கும் வகையில் மதியம் மற்றும் மாலை நேரங்களில் ஜில் பீர்களை அதிகம் விரும்பி குடிப்பதால் மதுக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.
மதுக்கடைகளில் ஜில் பீர்களை விற்பதற்கு வசதி அளிக்கப்பட்டு இருந்தபோதும் கூட பார்களில் மட்டுமே விற்க வேண்டும் என்றும் பார் உரிமையாளர்கள், ஊழியர்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் பீர்கள் விற்பது கிடையாது. அதனுடன் இணைந்து பார்களில் மட்டுமே ஜில் பீர் விற்பனை செய்யப்படுகிறது. கடையை விட ஜில் பீர் ரூ.40 முதல் ரூ.50 வரை கூடுதலாக விற்பனை செய்கிறார்கள்.
இந்த கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக டாஸ்மாக் கடைகளில் உள்ள பீர் பாட்டில்களை மொத்தமாக வாங்கி இருப்பு வைத்து குளிர்ச்சியூட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஊழியர்களே தெரிவிக்கின்றனர். மொத்தமாக பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும் ஜில் பீர்களுக்கு தேவை அதிகரித்துள்ளதால் பெரும்பாலான இடங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளான நெற்குன்றம், மதுரவாயல், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பல இடங்களில் பார்களில் மட்டுமே ஜில் பீர்கள் கிடைக்கின்றன.
சென்னையில் வளசரவாக்கம், வேளச்சேரி, ஜாபர்கான்பேட்டை, கே.கே. நகர், முகப்பேர் உள்ளிட்ட பல பகுதிகளில் பார்களில் மட்டுமே ஜில் பீர் விற்கப்படுகிறது. ஜில் பீர் தேவை இப்போதே அதிகரித்துவிட்டது.
இன்னும் 2 மாதங்களில் மேலும் தேவை 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது 5 சதவீதம் பீர் விற்பனை அதிகரித்துள்ளது. வழக்கமாக ஒரு லட்சத்து 35 ஆயிரம் பீர் வகை பெட்டிகள் விற்கப்படும். தற்போது 2 லட்சத்து 12 ஆயிரம் பீர் பெட்டிகள் விற்கப்படுவதாக டாஸ்மாக் வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
பீர் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் பிராந்தி, ரம், விஸ்கி போன்ற மதுபானங்களின் விற்பனை சற்று குறைந்துள்ளது.
கடந்த 7-ந்தேதி அனைத்து மதுபானங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் விற்பனை 3 சதவீதம் குறைந்தது. தற்போது அவை படிப்படியாக அதிகரித்து வருகிறது.