சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை சசிகலா கைப்பற்றியபோது, அவருக்கு எதிராக ஜெ.சமாதியில் மவுனவிரதம் இருந்து ‘தர்ம யுத்தம்’ நடத்திய முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தற்போது, ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை… சசிகலா மீது மரியாதை உள்ளது என ஆறுமுகசாமி ஆணையத்தில் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் தனது அரசியல் பிழைப்புக்காக, தமிழக மக்களையும், அதிமுக தொண்டர்களையும் பகடை காயாக நினைத்து, தர்மயுத்தம் என்ற பெயரில் ‘அரசியல் நாடகம்’ நடத்தி இருக்கிறார் என்பது இன்றைய அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் அளித்த வாக்குமூலம் வாயிலாக ஊர்ஜிதமாகி உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு டிசம்பர் 5ந்தேதி திடீர் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து, சசிகலா அதிமுகவை கைப்பற்றியதும், திடீரென ஜெ.சமாதிக்கு சென்று மவுன விரதம் மேற்கொண்டார் ஓபிஎஸ். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி தர்மயுத்தம் தொடங்கியவரே ஓ.பன்னீர் செல்வம்தான். அவர் எழுப்பிய சந்தேகத்தின் பேரிலேயே ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, சசிகலா சிறைக்கு செல்ல உடைந்த அதிமுக இணைந்தது. ஓபிஎஸ்-க்கு துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையில் ஆறுமுகசாமி ஆணையமும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போதைய தலைமைச்செயலாளர்கள், மருத்துவர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் ஜெ.உதவியாளர் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து அப்போலோ மருத்துவர்களிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக சுமார் 2 ஆண்டு காலம் ஆணையம் செயல்படாத நிலை உருவானது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மார்ச் 7ந்தேதி முதல் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அப்போலோ டாக்டர் எனப் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்திய நிலையில், சசிகலாவின் அண்ணி இளவரசி, ஓபிஎஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறது. நேற்றுமுதல் முன்னாள் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வதிடம் ஆணையம் சார்பில் அடுக்கடுக்கான கிடுக்கிப்படி கேள்விகள் தொடுக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய விசாரணையின்போது, பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்கு தெரியாது, எனக்கு தெரியாது என கூறி வந்தனர், இன்று சற்றே நிதானமாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.
‘இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும்.திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி வேட்பாளரை தேர்வு செய்ததும் ஜெயலலிதாதான் என்று கூறியவர், ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் தரப்பட்டது என்பது எனக்கு தெரியாது என்றார்.
அதுபோல, . அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது சிலமுறை அவர் நன்றாக இருப்பதாக சசிகலா கூறினார். சசிகலா கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே கூறினேன். பொதுவெளியில் எங்கும் பேசவில்லை என்றவர், அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் கூறவில்லை எனெ தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு முன்னர் அவரை பார்த்தாக கூறிய ஓபிஎஸ், 2016 டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறப்பதற்குமுன் நான் உட்பட 3 அமைச்சர்கள் அவரை நேரில் பார்த்தோம் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இதயம் செயலழிந்த பின் இதய துடிப்பை தூண்டும் CPR சிகிச்சை செய்தது எனக்கு தெரியாது என்று கூறிய ஓபிஎஸ், ஜெயலலிதாவுக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டது தொடர்பாக அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்லித்தான் தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், 2016 டிசம்பர் 4-ஆம் தேதி ஜெயலலிதாவை சந்திக்காமல், அப்போலோ குழுமம் தலைவர் பிரதாப் ரெட்டியை, அப்போதைய ஆளுநர் சந்தித்து பேசிய குறித்த கேள்விக்கு, தனக்கு நினைவில்லை என்று கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது, ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை கேட்டதும் அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தானே என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறிய ஓபிஎஸ், ‘ஜெயலலிதா மரணத்தில் தனிபட்ட முறையில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான் ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன். தனிபட்ட முறையில் சசிகலா மீது மரியாதையும் அபிமானமும் இப்பொது வரை உள்ளது. சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டுகளை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன் என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாதான் காரணமா என்றும், அவரது குடும்பத்தினர் சதி திட்டம் தீட்டினார்களா என்பது குறித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்ததை சுட்டிக்காட்டி சசிகலா தரப்பு வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் கூறிய ஓபிஎஸ், 2011-12, அதற்குப்பின் சசிகலா, அவரின் குடும்பத்தினர் சதித்திட்டம் தீட்டியதாக எந்த தகவலும் காவல்துறை திரட்டவில்லை. சாட்சியங்கள் ஆணையத்தில் கூறியது சரிதான் என தெரிவித்தார்.
ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடகா நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி முதல்வரை தேர்ந்தெடுக்க கூறினார். ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்த நேரத்தில் மிகுந்த துயரத்துடன் அழுது கொண்டிருந்தேன். அப்போது, அழாதே பன்னீர், இந்த நேரத்தில் நீ தைரியமாக இருக்க வேண்டும். சென்னைக்கு சென்று நான் சொன்னதை செய் என ஜெயலலிதா கூறினார் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில் ஓபிஎஸ்தான் முதலமைச்சர், அவரது பெயரைத்தான் முன்மொழிய வேண்டும் என நத்தம் விஸ்வநாதனுக்கு தனது பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் ஜெயலலிதா கூறியதாகவும், தன்னை முதல்வராக ஜெ தேர்வு செய்தார் என்றும் முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஆளுநரை சந்தித்து கடிதம் அளிக்கவும் ஜெயலலிதா கூறினார் எஎனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக சசிகலாவுக்கு ஆதரவான மனநிலையில் ஓபிஎஸ் செயல்பட்டு வரும் நிலையில், இன்று சசிகலா மீதுள்ள குற்றச்சாட்டுகளை களைய வேண்டும் என்பதற்காகவே ஆணையம் அமைக்க கோரிக்கை வைத்தேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓபிஎஸ் தனது அரசியல் வாழ்க்கை நீர்த்து போகாமல் இருப்பதற்காக, தர்மயுத்தம் என்ற பெயரில் தமிழ்நாடு மக்களை ஏமாற்றி நாடகம் நடத்தியிருப்பது இன்றைய அவரது வாக்குமூலம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதுவும் ஒருவகையில் அரசியல் விபச்சாரம்தானே…..!
‘எனக்கு தெரியாது’: கிளிப்பிள்ளை போல சொன்னதையே சொல்லும் ஓபிஎஸ்சிடம் இன்று 2வது நாளாக விசாரணை….