மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை திமுக உடன் இணைக்க வேண்டும் என வைகோவிற்கு எதிராக 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
மதிமுக மாவட்ட செயலாளர்கள் செவந்தியப்பன், சண்முகசுந்தரம், செங்குட்டுவன் ஆகியோர் நேற்று சிவகங்கையில் மதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கட்சியின் கொள்கைக்கும் விரோதமாக செயல்பட்டு வருகிறார்.
திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக கூறி தான் திமுகவிலிருந்து மதிமுக பிரிந்தது .ஆனால் தனது மகனை கட்சிக் கொள்கைக்கு விரோதமாக துணைப் பொதுச் செயலாளராக நியமித்து உள்ளார். இதற்கு பத்திற்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இனிமேல் பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஒத்துழைப்பு தரப்போவதில்லை என முடிவெடுத்துள்ளோம்.
மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு, திமுக உடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம் என கூறினர். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மதிமுக உயர்நிலைக் குழு உறுப்பினர் அழகுசுந்தரம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் நகை மோகன், சிவகங்கை மாவட்ட அவைத் தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் தங்கபாண்டியன், விருதுநகர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பாரதமணி ஆகியோர் உடனிருந்தனர்.