காஷ்மீர் பண்டிட்களின் இனப்படுகொலையை குறித்து எடுக்கப்பட்ட “தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்படம் ஒரு திட்டமிட்ட பிரச்சாரத் திரைப்படம் என இந்தியாவின் உளவு அமைப்பு “ரா”வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் குற்றம் சாட்டியுள்ளார்.
விவேக் அக்னிஹோத்ரியின் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படம் சமீபத்தில் வெளியானது. பிரதமர் மோடி உட்பட பல மாநில முதல்வர்கள், முன்னணி திரைப்பிரபலங்களின் பாராட்டை இந்த திரைப்படம் பெற்றது. மம்தா பானர்ஜி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்களிடம் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
இதுதொடர்பாக இந்திய உளவு அமைப்பான “ரா” (Research and Analysis Wing – RAW) அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 1990 காலகட்டத்தின் இரு துருவ மனப்பான்மையை இந்த திரைப்படம் மீண்டும் தூண்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார். “இன்னும் நான் படம் பார்க்கவில்லை., அதற்கான திட்டம் எதுவும் இல்லை. ஏனென்றால் இது ஒரு பிரசாரப் படம்” என்று கூறினார் துலாத்.
அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து துலாத் மாறுபட்ட பார்வையை முன்வைத்தார். அவர் “1989 வரை ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த ஜக்மோகன் இந்த மோதல்கள் துவங்கியபோது அதன் சுமையைத் தாங்குவதை விரும்பவில்லை. எனவே அவர்கள் வெளியேறத் தொடங்கியவுடன், அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். நிம்மதியடைந்தார். 1990 இல் கொலைகள் நடந்த உடனேயே பண்டிட் இடம்பெயர்வு தொடங்கியது. சமூகத்தின் மிகவும் வசதியான உறுப்பினர்கள் டெல்லிக்குச் சென்றனர். வேறு எங்கும் செல்ல முடியாதவர்கள் ஜம்முவில் நிறுவப்பட்ட முகாம்களை நாடினர்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர் “காஷ்மீரி முஸ்லிம்களும் தில்லி போன்ற இடங்களுக்குப் புறப்பட்டனர். நிலைமை சீரடைவது போல் தோன்றிய போது அவர்களில் பலர் திரும்பினர். வெளியேற இயலாத பல பண்டிதர்கள் “முஸ்லிம்களால் பாதுகாக்கப்பட்டனர்”. இப்போதும் பல பண்டிதர்கள் பள்ளத்தாக்கில் வசித்து வருகின்றனர்.
வெளியேறிய பண்டிட்டுகள் திரும்பி வந்தால், அங்குள்ள முஸ்லீம்கள் அவர்களைப் பாதுகாக்க முயற்சிப்பார்கள். இருப்பினும், அவர்களுக்கென தனியான காலனிகளை நிறுவுவது தவறான வழி. நீங்கள் அவர்களுக்கு ஒரு தனி காலனியைக் கட்டினால், அவர்கள் குறிவைக்கப்பட வாய்ப்புண்டு.”என்று குறிப்பிட்டார். இந்த திரைப்படம் தணிந்துள்ள இருதுருவ மனநிலையை திட்டமிட்டு தூண்டுவதற்கு எடுக்கப்பட்ட பிரச்சாரமே என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.