சென்னை: “ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதில் அளித்துள்ளேன்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட ஆணையத்தில் நேற்றும், இன்றும் ஆணையம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை நான் அளித்திருக்கிறேன். அதேபோல் எதிர் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் உரிய பதிலை தெரிவித்திருக்கிறேன். நேற்றும் இன்றும் காலை மாலை என 4 நேரங்களிலும் நடந்த விசாரணையில் உரிய பதிலை, உண்மையான பதிலை அளித்திருக்கிறேன்.
ஆணையம் அமைக்கப்பட்டு எனக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவரங்கள்: 12.12.2018-ல் சம்மன் அனுப்பி 20.12.2018-ல் விசாரணைக்கு ஆஜராக கூறப்பட்டிருந்தது. 26.12.2018 அன்று சம்மன் அனுப்பி 8.1.19 ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. 11.1.19 அன்று சம்மன் அனுப்பி, 23.1.19 ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது. 22.1.19 சம்மன் அனுப்பி, 29.1.19 அன்று ஆஜராகும்படி கூறப்பட்டிருந்தது. 14.2.19 அன்று சம்மன் அனுப்பி, 19.2.19 அன்று ஆஜராகும்படி கூறப்பட்டிருந்தது. 25.2.19 சம்மன் அனுப்பி 28.2.19 ஆஜராகும்படி சம்மன் வரப்பெற்றது. 26.4.19 அனுப்பி வைக்கப்பட்ட சம்மனுக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை காரணமாக ஆஜராகவில்லை. எனவே 7 முறை, சம்மன் அனுப்பப்பட்டு, 6 முறை எனக்கு கடிதம் வரப்பெற்றது, இரண்டு முறை, 23.2.19 சொந்த காரணத்துக்காகவும், 19.2.2019 அன்று பட்ஜெட் இருந்த காரணத்தாலும், நான் ஆணையத்திற்கு வரமுடியாது என்று கடிதம் அனுப்பினேன். அதை ஆணையமும் ஏற்றுக்கொண்டது.
எனக்கு சம்மன் அனுப்பப்பட்டு 2 முறைதான் ஆணையத்தின் விசாரணைக்கு நான் ஆஜராகவில்லை. சில பத்ரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், 8 முறை சம்மன் அனுப்பி நான் வரவில்லை என்ற கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.அதுமிகவும் தவறான கருத்து என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெயலலிதா மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டதற்கும், இறப்பதற்கு முன்பாக எக்மோ கருவி அகற்றப்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக, இடையில் 74 நாட்கள் நான் ஜெயலலிதாவை பார்க்கவில்லை. இதுதான் உண்மை. இதில் முரண்பாடான கருத்தே இல்லை.
பொதுமக்களின் கருத்தாக சந்தேகம் இருக்கிறது என்றுதான் முதன்முதலாக பேட்டி கொடுத்தேன். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு, சசிகலாவுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொண்டு, நிரூபித்தால் அவர் மேல் இருக்கிற குற்றச்சாட்டு நீக்கப்படும் என்ற கருத்தையும் நான் சொல்லியிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில், என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை தந்திருக்கிறேன். தெரிந்த கேள்விகளுக்கு பதிலளித்தேன், தெரியாத கேள்விகளுக்கு தெரியாது என பதிலளித்தேன். ஆணையத்தின் விசாரணை எனக்கு முழு திருப்தியாகவும், நிறைவாகவும் இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மரியாதையும், மதிப்பு உண்டு” என்று அவர் கூறினார்.