பச்சைப்பசேலென பசுமைப் போர்த்தியிருக்கும் நீலகிரி மலைத் தொடர்கள், உறைபனியின் தாக்கத்தால் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கித் தகிக்கிறது. அங்கும் இங்குமாக அடிக்கடி காட்டுத் தீ பரவி காட்டுயிர்களை அச்சுறுத்தி வருகிறது. காட்டுத்தீயை அணைக்கவும் தீ ஏற்படாமல் தடுக்கவும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பரந்து விரிந்த முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் இருக்கும் நீர்நிலைகளில் நீர் இருப்பு வற்றத் துவங்கியிருப்பதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வன யானை போன்ற வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. வாகனங்கள் மூலம் செயற்கை குட்டைகளில் வனத்துறையினர் நீரை நிரப்பி வருகின்றனர்.
குன்னூர் மலை அடிவாரத்தில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக யானைகள் கூட்டமாக குன்னூர் மலை உச்சியை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்த நிலையில், குன்னூர் ரன்னிமேடு மலை ரயில் நிலையம் அருகில் கடந்த நான்கு நாள்களாக 9 யானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று உலவி வருகின்றன. நேற்றுவரை ரன்னிமேடு ரயில் நிலையத்தில் முகாமிட்டிருந்த அந்த யானைக்கூட்டம் அருகில் இருக்கும் தனியார் தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்தது. பசுந்தழைகளையும் தண்ணீரையும் தேடி குட்டிகளுடன் வரிசையாக யானைகள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகின்றன. அதே வேளையில் தேயிலைத் தோட்டத்தில் யானைகள் முகாமிட்டிருப்பதால் தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால், யானைகள் இந்த பகுதியில் இருந்து வெளியேறும் வரை தேயிலை பறிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
குன்னூரில் யானைகள் நடமாட்டம் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர், “வறட்சி காலங்களில் யானைகள் இந்த பகுதிக்கு வருவது வாடிக்கையானதுதான். தேயிலைத் தோட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலவும் யானைகளை கண்காணித்து வருகிறோம்.
யானை நடமாட்டம் குறித்து உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகிறோம். மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் உலவும் ஒற்றை யானையையும் கண்காணித்து வருகிறோம். சுற்றுலாப் பயணியர் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கும் யானைகள் நடமாட்டம் குறித்து எச்சரிக்கை கொடுத்து வருகிறோம்” என்றார்.