புதுடில்லி :தேர்தல் நடைமுறைகளில், சமூக வலை தளங்களின் ஆதிக்கம் உள்ளதாக, காங்., தலைவர் சோனியா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக, பார்லிமென்ட் நிலைக் குழு விசாரிக்க உள்ளது.
சமூக வலைதளம்
பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. காங்., தலைவர் சோனியா சமீபத்தில் லோக்சபாவில் பேசியபோது, ‘தேர்தல்களின்போது, சமூக வலை தளங்கள் பாரபட்சமாக நடக்கின்றன. ‘அவற்றின் குறுக்கீடு, தலையீடு உள்ளது. இது தேர்தல் நடைமுறைகளை சீர்குலைக்கிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.சோனியாவின் மகனும், காங்., முன்னாள் தலைவருமான ராகுலும், இது தொடர்பாக சமூக
வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில், இது குறித்து தகவல் தொழில்நுட்ப துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு விசாரிக்க உள்ளது.
விளக்கம்
காங்.,கைச் சேர்ந்த சசி தரூர் தலைவராக உள்ள இக்குழு, ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்துக்கு ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. அதில் விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டு உள்ளது. இது குறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் ஷெஷாத் புனேவாலாகூறியுள்ளதாவது:தேர்தல்களில் தோல்வியடைந்தால், இவர்களுக்கு மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், தேர்தல் கமிஷன் ஆகியவற்றை குறை சொல்வது வாடிக்கையாக உள்ளது.
மத்திய அரசு சமூக வலை தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை எடுத்த போது, அவை சிறப்பாக செயல்படுவதாகவும், அவற்றின் குரலை மத்திய அரசு நசுக்குவதாகவும் இந்தத் தலைவர்கள் கூறினர். தற்போது, சமூக வலை தளங்கள் அவர்களுக்கு எதிரியாகி விட்டன.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement