சேலம் பஜார் பகுதியில் இயங்கி வரும் ராகவேந்திரா என்ற நகைக்கடையில், நேற்று சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு குற்றப்பிரிவு உதவி ஆணையர் மகேந்திரன் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் தங்களுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில் இரண்டு அதிகாரிகள், கடைக்கு கஸ்டமர் போலச் சென்று “யானைத் தந்தத்திலான செயின் வேண்டும்… கிடைக்குமா!” என்று கேட்க, உரிமையாளர் மோகன்காந்த் யானைத் தந்தத்தில் வைத்திருந்த பல்வேறு மாடல் செயின்களை எடுத்துக் காட்டியுள்ளார். தங்களுக்குக் கிடைத்த தகவல் உண்மையென உறுதிசெய்துகொண்ட அதிகாரிகள் கையுங்களவுமாக உரிமையாளர் மோகன் காந்த்தைப் பிடித்து அவரிடமிருந்த மான் கொம்பு, நரிப் பல், புலி நகம், போன்றவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
அதையடுத்து, நகைக்கடை உரிமையாளரிடம் விசாரித்ததில் கொலுசு வியாபாரி வெங்கடேக்ஷ் பாபு எனும் நபரை அவர் கை காட்டியுள்ளார். அந்த நபரிடமிருந்துதான் இதெல்லாம் வாங்கியதாகவும் கூறியுள்ளார். அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் வெங்கடேஷ் பிரபுவைப் பிடித்து விசாரிக்க, மோதிரக் கல் விற்பனை செய்யும் குமரேசன், செந்தில்குமார் ஆகியோர் தான் இதெல்லாம் தன்னிடம் விற்பதாகக் கூறியுள்ளார். பின்னர் அதிகாரிகள் நான்கு பேரிடமும் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது அனைவரும் தாங்கள் விற்பனை செய்யும் ஆபரணங்கள் எதுவும் ஒரிஜினல் கிடையாது என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதை உறுதிசெய்த அதிகாரிகள், இந்த பொருள்கள் இவர்களுக்கு எங்கிருந்து கிடைக்கப்பெறுகின்றன என்பது குறித்து விசாரித்தனர். அப்போது, இதையெல்லாம் ஜெயமந்தீர் எனும் பழங்குடியினத்தவர் தான் விற்றதாகக் கூறியுள்ளனர். அதையடுத்து, அதிகாரிகள் ஜெயமந்தீரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, புலிப் பல் வேண்டும் எனக் கூறி வரவழைத்துப் பிடித்தனர். அந்த நபரிடமிருந்து நரிப் பல், நரியின் கால் நகம், காட்டுப் பூனை வால், மான் கொம்பு கைப்பற்றப்பட்டன.
மேற்கண்ட ஐந்து பேருக்கு ரூ.2.15 லட்சம் விதித்த வனத்துறையினர், ஜெயமந்தீர் உயிரினங்களைக் கொன்றதற்காக வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.
சேலத்தில் வன விலங்கு குற்றப் பிரிவு தனிப்படையினர் நடத்திய ரகசிய சோதனையில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.