மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரியின் தாளாளருக்கு, கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள நர்சிங் கல்லூரியின் தாளாளராக செயல்பட்டு வருபவர் ஜோதிமுருகன். பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மீது, மாணவிகள் கொடுத்த புகாரில், போக்சோ உட்பட 14 பிரிவுகளில் மூன்று வழக்குகளை தாடிக்கொம்பு போலீசார் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கல்லூரி தாளாளரை, காவல்துறையினர் கைது செய்யாமல் இருந்ததை கண்டித்து மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில், கல்லூரித் தாளாளர் ஜோதிமுருகன் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில், காவல்துறையினர் அவரை, பழனி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், தாளாளர் ஜோதிமுருகனுக்கு கீழமை நீதிமன்றம் ஒரே வாரத்தில் ஜாமீன் வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்பட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த அமைப்புகள், அரசு தரப்பில் ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசுத்தரப்பில், கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தங்களையும் சேர்க்கக்கோரி, அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் சுகந்தி சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகனின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து 3 நாட்களில் ஜோதிமுருகன் சரணடைய வேண்டும் என்றும், தவறினால் காவல்துறையினர் அவரை கைது செய்ய வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM