சென்னை
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதியாக உள்ள நளினிக்கு எந்த சட்டத்தின் அடிப்படையில் ஜாமீன் வழங்க முடியும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக முந்தைய அதிமுக அரசு தீர்மானம் இயற்றி அதை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார்;
இதையொட்டி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆளுநர் முடிவுக்காகக் காத்திருக்காமல் தம்மை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே இதே வழக்கில் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் அந்த வழக்கின் முடிவுக்குப் பிறகு இதை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.
இன்று நளினியின் ஜாமீன் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளதாகத் தமிழக அரசின் தலைமை வழக்க்றிஞர் தெரிவித்தார். அதையொட்டி நளினி தரப்பு வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஜாமீன் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, “குற்ற விசாரணை சட்டத்தின்படி முன் ஜாமீன் கோரலாம் அல்லது கைது செய்யப்பட்டால் ஜாமீன் கோரலாம் தண்டிக்கப்பட்டால் ஜாமீன் கோரலாம். தற்போது எந்த ஒரு மேல்முறையீட்டு வழக்கும் நிலைவையில் இல்லாத நிலையில் நளினிக்கு எந்த சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்க முடியும்?
அனைத்து நீதிமன்றங்களுக்கும் மேலானது உச்சநீதிமன்றம். ஆகையால் உயர்நீதிமன்றத்தால் உச்சநீதிமன்றத்தை எதிர்த்து ஜாமீன் வழங்க முடியாது. மனுதாரர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை மட்டுமே நுக முடியும்” எனத் தெரிவித்துள்ளார். பிறகு நளினி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையின்படி மனு மீதான விசாரணை மார்ச் 24 ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.