நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ’நாங்கள் எடுத்துக்கொண்ட பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது’ என்று விஷால் கூறியுள்ளார்.
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர் விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,
”தேர்தல் முடிந்து மூன்று ஆண்டுகள் கழித்து எண்ணிக்கை நடைபெற்றது இதுதான் முதல் முறை. வேறு எங்கும் இது போன்று நடந்திருக்காது. தேர்தலை நடத்திக்கொடுத்த ஓய்வு பெற்ற பத்மநாபன் அவர்களுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேர்தல் நடத்த ஆகும் செலவை கட்டடம் கட்டலாம் என நினைத்தோம். அனைவரையும் அரவணைத்துச் செல்லாம் என திட்டமிட்டோம். ஆனால், அவர்கள் போட்டியாக பார்த்தார்கள்.
நாடக நடிகர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகத்தான் நாங்கள் எல்லோரும் போராடுகிறோம். அது நல்லபடியாக நடக்கும். நடிகர் சங்க கட்டடத்திற்கு இன்னும் நான்கு மாதம் கொடுத்திருந்தால் முடித்திருப்போம். தற்போது 30% விலையேற்றம் கண்டுள்ளது. 21 கோடி நிதி தேவைப்படுகிறது. தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது தனிமனிதர் சம்பந்தப்பட்டது அல்ல. பல குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. எனவே அவர் எங்களுக்கு உதவி செய்வார்” என்று கூறினார்.