தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற பொருளாதார சபை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (22) நடைபெற்ற அமைச்சவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அரசாங்க தகவல் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் மிலிந்த ராஜபக்க்ஷவும் இதில் கலந்து கொண்டார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் சர்வதேச நாணய நிதியத்துடன் செயல்படும் பொழுது தொழில்நுட்ப ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடைமுறை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டார்.
நேற்றைய பொருளாதார சபையின் ஆலோசனைக் குழு என்ற ரீதியில் பல யோசனைகளை குழுவினர் முன்வைத்திருந்தனர்.
இதில் குறுகிய கால தீர்விலும் பார்க்க நீண்டகால தீர்வே சபையின் அபிலாசையாக அமைந்திருந்தது.
முக்கியமாக தற்பொழுது நிலவும் திநி நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் செயற்படவேண்டிய முறை தொடர்பாக குறிப்பிடப்பட்டதுடன் அதற்கு தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்த தேவையான நடைமுறைகள் தொடர்பிலும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
கடனை மறுசீரமைத்தல் தொடர்பில் தொழில்நுட்ப விடயங்கள், அவை தொடர்பில் கையாளப்படவேண்டிய முறைகள் குறித்தும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.