டெல்லி: நீட் தேர்வெழுதும் கிராமப்புற மாணவர்களின் விவரங்கள் தங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகாமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்ற தேர்வெழுதுகின்ற மாணவர்களின் விவரங்கள் மாநில வாரியாக இல்லை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தேசிய தேர்வு முகாமை பதில் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு என்பது தேசிய அளவில் மிக பெரிய விவாத பொருளாக இருந்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களை தவிர்த்து மற்ற எதிர்க்கட்சியினர் ஆளும் மாநிலங்களில் நீட் தேர்வு எதிர்ப்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் ஏழை எளிய மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்ற வாதம் எழுந்து வருகிறது. இந்நிலையில், கிராமப்புற மாணவர்கள் எவ்வளவு பேர் நீட் தேர்வு எழுதுகிறார்கள், அதில் எவ்வளவு பேர் தேர்ச்சி பெறுகின்றனர் என்ற விவரங்கள் குறித்து தேசிய தேர்வுமுகாமையிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு தேசிய தேர்வு முகாமை அளித்துள்ள பதிலில் கிராமப்புற மாணவர்கள் குறித்து எந்த விவரங்களும் தங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகாமை பதில் அளித்துள்ளது. கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றசாட்டு முன் வைக்க கூடிய நிலையில், தேசிய அளவில் கிராமப்புறங்களில் இருந்து எத்தனை மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள், எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள் என்ற விவரங்கள் கூட தங்களிடம் இல்லை என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக துறைசார்த்த நபர்கள் தெரிவிக்கின்றனர். போதிய விவரங்கள் தேசிய தேர்வு முகாமையிடம் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை எனவும், அதனை வெளியிட்டால் மேலும் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் இதுபோன்ற தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்விகல் கேட்கப்பட்டாலும் கூட பதில் அளிப்பது இல்லை என்ற குற்றசாட்டுகளையும் கல்வியாளர்கள் முன்வைக்கின்றனர்.