நீண்ட இழுபறிக்குப் பின் உத்தரகாண்ட், கோவா பாஜ முதல்வர்கள் தேர்வு

டேராடூன்: நீண்ட இழுபறிக்குப் பின் உத்தராண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமியையும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்தையும் பாஜ எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். மணிப்பூரில் பிரேன் சிங் புதிய முதல்வராக பதவியேற்றார். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. இதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜ மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதில், உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அவர் வரும் 25ம் தேதி லக்னோவில் நடக்கும் விழாவில் பதவியேற்க உள்ளார். மணிப்பூரில் இழுபறிக்குப் பிறகு பிரேன் சிங் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், உத்தரகாண்ட், கோவாவில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தலில் 70 தொகுதிகளில் 47 தொகுதிகளை பாஜ கைப்பற்றியது. எனினும் முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தாமி காதிமா தொகுதியில் தோல்வியடைந்தார். கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த தொகுதியில  வெற்றி பெற்று வந்த தாமி தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து புஷ்கர் சிங் தாமியை மீண்டும் முதல்வராக தேர்வு செய்வதற்கு கட்சியில் எதிர்ப்பு நிலவி வந்தது. இப்பிரச்னையை தீர்க்க அம்மாநில பொறுப்பாளர்களான பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவு துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி ஆகியோர் டேராடூன் சென்று பாஜ எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினர். நீண்ட இழுபறிக்குப் பிறகு மீண்டும் புஷ்கர் தாமியை முதல்வராக தேர்வு செய்வதற்கு எம்எல்ஏகள் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர் உத்தரகாண்ட் முதல்வராக அறிவிக்கப்பட்டார்.இதே போல, தேர்தல் முடிவு வெளியாகி 11 நாட்களான நிலையில் கோவா முதல்வரை தேர்வு செய்வதிலும் இழுபறி நிலவியது. இதற்காக பாஜ மேலிட பார்வையாளர்களான ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் எல்.முருகன் ஆகியோர் பனாஜியில் நேற்று எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தினர். இதில், கோவா முதல்வராக முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், பிரமோத் சாவந்த்தே மீண்டும் முதல்வராக தொடர்வார் என பாஜ அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜ எம்ஜிபியின் 2 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் 3பேரின் ஆதரவையும் பெற்றது. உத்தரகாண்ட், கோவா முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், விரைவில் அவர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.* பிரேன் சிங் பதவியேற்புமணிப்பூர்  மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜ 32 இடங்களில்  வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற கட்சி கூட்டத்தில் பிரேன் சிங் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து  மணிப்பூர் மாநில முதல்வராக இரண்டாவது முறையாக பிரேன் சிங் நேற்று பொறுப்பேற்றார். அவருக்கு ஆளுநர் இல.கணேசன் பதவி பிரமாணம் மற்றும்  ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து 5 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இரண்டாவது முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ள பிரேன் சிங்குக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.